Paristamil Navigation Paristamil advert login

இருமொழிக் கொள்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் ராஜ்மோகன்

இருமொழிக் கொள்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் ராஜ்மோகன்

20 வைகாசி 2026 புதன் 12:48 | பார்வைகள் : 933


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக 1 முதல் 3 வரையிலான வகுப்புகளுக்குப் புதிதாக வெளியிடப்பட்ட பாடபுத்தகங்களுக்கான ஆசிரியர் கையேடுகளை பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

மேலும், மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சியையும் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்..அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, \"ஆசிரியர்கள் திறந்த மனதுடன் வகுப்பறையில் மாணவர்களை அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்.

கற்றலில் உள்ள எந்தவொரு குழந்தையும் விடுபட்டுவிடக் கூடாது. மெல்லக் கற்கும் மாணவர்களையும் ஊக்கமளித்து அவர்களுக்கு ஏற்றவகையில் கற்பிக்க வேண்டும். இப்பயிற்சியானது வேர்களுக்கு நீர் ஊற்றுவது போன்று முக்கியத்துவம் வாய்ந்தது\" என்றார்.

பின்னர், அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

“1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 4-ந் தேதி பள்ளி திறக்கப்படும். மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் சுமை வரக்கூடாது என்ற நோக்கோடு இதை செயல்படுத்த உள்ளோம். பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.அரசு பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மாணவர்களுடைய எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதை சரி செய்வதற்கான முயற்சிகளுக்கு இந்த பாடத்திட்டம் உதவி செய்யும்.

இந்த பாடத் திட்டம் மாணவர்களை மையப்படுத்திய அணுகுமுறையோடு தயாரிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 கோடி நிதிக்காக பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்கிறீர்கள், கடந்த 2 ஆண்டுகளாக நிதி வரவில்லை.

இது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. எந்த மறைமுக அழுத்தத்திற்கும் நாங்கள் அடிபணியப் போவதில்லை. இரு மொழிக் கொள்கை என்பது, த.வெ.க.வின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை. அதில், எந்த இடத்திலும் சமரசமில்லை. கொள்கை சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதன்கிழமை (இன்று) காலை, வெளியிடப்படும்.”

இவ்வாறு அவர் கூறினார்.