Paristamil Navigation Paristamil advert login

டெல்லி அரசியலிலும் தடம் பதிக்கும் தவெக... மாநிலங்களவை முதல் எம்.பி. யார்?

டெல்லி அரசியலிலும் தடம் பதிக்கும் தவெக... மாநிலங்களவை முதல் எம்.பி. யார்?

19 வைகாசி 2026 செவ்வாய் 12:34 | பார்வைகள் : 1321


தமிழக சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட த.வெ.க. மகத்தான வெற்றியை பதிவு செய்தது. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்று இருக்கிறார்.

பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இடைத்தேர்தலில் யாரை நிறுத்துவது என்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, அ.தி.மு.க.வைச் சேர்ந்த சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டி வெற்றி பெற்றதால், அவர் வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனவே அந்த இடம்காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த ஒரு இடத்திற்கு மாநிலங்களவை எம்.பி.யை நியமனம் செய்ய விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.அந்த அறிவிப்பு வரும் பட்சத்தில், தமிழக சட்டசபையில் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களை கொண்ட த.வெ.க.வுக்கு அந்த ஒரு உறுப்பினர் பதவி கிடைக்கும்.

அந்த வகையில், சட்டசபை தேர்தலில் வென்ற கையோடு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியையும் த.வெ.க. கைப்பற்ற உள்ளது. இந்த பதவி த.வெ.க. முக்கிய நிர்வாகி ஒருவருக்கு வழங்க முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

த.வெ.க. முதல் எம்.பி. என்ற அடையாளத்துடன் அவர் டெல்லி செல்வார். அவர் யார்? என்பது தான் அரசியல் அரங் கில் கேள்வியாக எழுந்துள்ளது. மாநில அரசியலை தொடர்ந்து டெல்லி அரசியலிலும் த.வெ.க. தடம் பதிக்க உள்ளது.