ஏ.ஐ., தொழில்நுட்பம், வர்த்தகம் ஸ்வீடன் நாட்டுடன் இணைந்து செயல்பட இந்தியா முடிவு
19 வைகாசி 2026 செவ்வாய் 10:26 | பார்வைகள் : 994
ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சந்தித்து பேசிய நிலையில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், வர்த்தகம், கலாசார பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவதாக இரு நாடுகளும் கூட்டாக அறிவித்துள்ளன.
மேற்காசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஐந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். முதலாவதாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்ற நிலையில், இரண்டாவதாக நெதர்லாந்துக்கு அவர் சென்றார்.
இந்நிலையில், மூன்றாவது நாடாக ஐரோப்பிய நாடான ஸ்வீடனுக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றார். கோதன்பர்க் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் நேரில் வரவேற்றார். தொடர்ந்து, புலம்பெயர்ந்த இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதில், ஸ்வீடன் இளவரசி விக்டோரியாவும் பங்கேற்றார்.
இரு தரப்பு உறவுகளை ஆய்வு செய்த தலைவர்கள், பொருளாதார மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
மேலும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். ஐ.நா., சபை சீர்திருத்தங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்ததற்காக, ஸ்வீடனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இந்தியா - ஸ்வீடன் உறவில் ஆற்றிய பங்களிப்பு மற்றும் பிரதமர் மோடியின் தலைமை பண்பை பாராட்டி, அவருக்கு, ஸ்வீடனின் மிக உயரிய விருதான, 'ராயல் ஆர்டர் ஆப் தி போலார் ஸ்டார், டிகிரி கமாண்டர் கிராண்ட் கிராஸ்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஸ்வீடன் பயணத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
* இந்தியா - -ஸ்வீடன் இடையேயான இருதரப்பு உறவு, அடுத்த கட்டமான, வியூகக் கூட்டாண்மை என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், 2026 - 30 கால கட்டத்திற்கான கூட்டு அறிக்கை மற்றும் கூட்டு திட்டத்துக்கும் இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.
* இரு நாடுகளும் இணைந்து, 'இந்தியா - -ஸ்வீடன் கூட்டு கண்டுபிடிப்பு கூட்டாண்மை 2.O' திட்டத்தை துவங்கி உள்ளன. இதன் கீழ், இணையவழி வாயிலாக செயல்படும், 'இந்தியா - -ஸ்வீடன் கூட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்' நிறுவப்படவுள்ளது. இந்த மையம் செயற்கை நுண்ணறிவு, 6ஜி, குவாண்டம் கம்ப்யூட்டிங், தாதுக்கள், விண்வெளி ஆராய்ச்சி போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களில் கூட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும். மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஸ்மார்ட் சிட்டிகள், நீர் மேலாண்மை ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும்.
* வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் நீண்ட கால ஒத்துழைப்பை உறுதி செய்ய, 'இந்தியா - -ஸ்வீடன் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு வழித்தடம்' என்ற புதிய முயற்சி துவங்கப்பட்டு உள்ளது. இந்த வழித்தடம், இரு நாடுகளின் மேம்பட்ட தொழில்நுட்ப துறைகளில் உள்ள தொழில் துறைகள், ஸ்டார்ட் -அப்கள், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையே வலு வான கூட்டணியை ஊக்குவிக்கும்.
* அடுத்த ஐந்து ஆண்டுகளில், இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை இரட்டிப்பாக்க இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன. இந்த முடிவு, இந்தியாவின், 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு பக்க பலமாக அமையும்.
* இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், 'இந்தியா - -ஸ்வீடன் சிறுதொழில் மற்றும் ஸ்டார்ட் -அப் தளம்' உருவாக்கப்பட உள்ளது. இது, இரு நாடுகளின் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவித்து, புதுமைப் படைப்புகளுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை பலப்படுத்தும்.
* இரு நாட்டு மக்களிடையேயான தொடர்பை வலுப்படுத்த, 'விகாஸ் பி விராசத் பி' எனப்படும், 'வளர்ச்சியும், பாரம்பரியமும்' என்ற கருப்பொருளின் கீழ், 'தாகூர்- - ஸ்வீடன் விரிவுரை தொடர்' துவக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, கலாசார மற்றும் அறிவுசார் ஈடுபாட்டை இரு நாடுகளிடையே அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan