Paristamil Navigation Paristamil advert login

ரூ.10.50 லட்சம் கோடி கடன் விவகாரம்; புதிய அமைச்சருக்கு புரிதல் இல்லை என்கிறார் தங்கம் தென்னரசு

ரூ.10.50 லட்சம் கோடி கடன் விவகாரம்; புதிய அமைச்சருக்கு புரிதல் இல்லை என்கிறார் தங்கம் தென்னரசு

18 வைகாசி 2026 திங்கள் 08:37 | பார்வைகள் : 876


ரூ.10.50 லட்சம் கோடி கடன் உள்ளதாக உண்மைக்கு புறம்பாகவும், அடிப்படை புரிதல் இன்றியும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசி உள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டித்துள்ளார்.

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தொழில்துறை அமைச்சர் சீர்த்தனா, தமிழகத்தின் முந்தைய அரசால் ரூ.10.50 லட்சம் கோடி கடன் வாங்கி வைக்கப்பட்டு உள்ளதாக கூறியிருந்தார். கடன் நிலவரத்தை முழுமையாக ஆராய்ந்த பின்னரே அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

அவரின் பேச்சை கண்டித்துள்ள முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டி கூறுவதாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவின் விவரம்;

முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், 'பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க” என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இப்படி அவதூறு பரப்புவதும், உள் நோக்கோடு கட்சிக்கு  எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே ஒரு  மாய பிம்பத்தை சமூக வலைதள ஜோடனைகள் மூலம் கட்டமைக்க முயற்சிப்பதும், விஷமத்தனமானது மட்டுமல்ல; வன்மையாகக் கண்டிக்கத்தக்கனவும் ஆகும்.

அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக, மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழகத்தின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது

எனினும், அரசு நிர்வாகத்திலும்,  அமைச்சரவையிலும் பல ஆண்டு அனுபவமிக்கவரான நிதி அமைச்சர் செங்கோட்டையன், நிதித்துறை நிர்வாக நடைமுறைகளில் நேரடி அனுபவமிக்க தற்போதைய நிதித்துறை செயலாளர் ஆகியோர் இடித்துரைத்து தொழில் துறை அமைச்சரின் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு நிறுத்த முன் வருவார்களா? அல்லது பொய்யும், புனைகதைகளும் மிக்க இத்தகைய மலிவான பிரசாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா?.

இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.