Paristamil Navigation Paristamil advert login

சூர்யாவின் கருப்பு படம் எப்படி இருக்கு..?

சூர்யாவின் கருப்பு படம் எப்படி இருக்கு..?

15 வைகாசி 2026 வெள்ளி 15:41 | பார்வைகள் : 196


கோர்ட்டில் நீதி மறுக்கப்படும்போது, தாமதிக்கப்படும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக கடவுளே வக்கீலாக வந்து வாதாடினால் எப்படி இருக்கும். இதுதான் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு படத்தின் கரு.

சென்னை ஏழுகிணறு குற்றவியல் நீதிமன்றத்தில் 'பேபி கண்ணன்' என்ற ரவுடி வக்கீலான ஆர்.ஜே.பாலாஜியின் அட்டகாசம் ஓவராக இருக்கிறது. ஜட்ஜ் நட்டியை கைக்குள் போட்டுக் கொண்டு, தனது டீமுடன் அங்கே தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். தனது மகளின் ஆபரேசனுக்காக கேரளாவில் இருந்து வரும் இந்திரன், சென்னை ரயில் நிலையத்தில் ஆபரேசன் செலவுக்காக வைத்திருந்த நகையை பறி கொடுக்கிறார். அந்த நகை போலீஸ், கோர்ட்டில் சிக்கி தவிக்கிறது. அவருக்கு வாதாடுவது போல நடித்து ஏமாற்றுகிறார் ஆர்.ஜே.பாலாஜி. ஒரு கட்டத்தில் கோர்ட் வாசலில் இருக்கும் கருப்பசாமி கோயிலில் மிளகாய் அரைத்து 'நீதி கிடைக்க வேண்டும்' என்று இந்திரன் வேண்ட, வக்கீலாக கருப்பசாமியே வருகிறார். அவர்தான் சூர்யா. கோர்ட்டில் அவர் வாதாடி ஜெயித்தாரா? இந்திரன் மாதிரியான பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுத்தாரா? இதுதான் கருப்பு படத்தின் மீதிக் கதை.

கடவுள் நம்பிக்கை, நீதித்துறையின் மறுபக்கம் இரண்டையும் கலந்து ஒரு கமர்ஷியல் கதையாக கருப்பு படத்தை எடுத்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஹீரோ இல்லாமல் அவரே நடித்து இருக்கிறார். அந்த சமயத்தில் இந்திரன் பாதிக்கப்படுவது, போலீஸ், கோர்ட்டில் சாமான்ய மக்கள் அவதிப்படுவதை காண்பிக்கிறார். படத்தில் நடித்த அனைவரை விடவும் மகள் ஆபரேசனுக்காக தவிக்கும் தந்தையாக, நகையை இழந்து அதை மீட்க போராடுபவராக நடிப்பில் கலக்கியிருக்கிறார் மலையாள நடிகர் இந்திரன். அவரின் அப்பாவித்தனம், கோபம், ஒரு கட்டத்தில் விரக்தியில் அவர் செய்யும் காரியம் பிரமாதம். அவர் மகளாக வரும் அனகா மாயாரவியும் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். தங்களுக்காக வாதாடும் வக்கீல்களுக்கு பிரியாணி வழங்கி கொடுத்துவிட்டு அவர் பேசும் உருக்கமான டயலாக், கோர்ட்டில் தனது ஆடை சுதந்திரம் குறித்தும் சீறும் இடம் செம. படத்தின் பெரிய பிளஸ் அப்பா, மகள் சம்பந்தப்பட்ட அந்த காட்சிகள்

கொஞ்சம் லேட்டாக வந்தாலும், மாஸ் ஆக, கருப்பசாமியாக களம் இறங்கி கலக்கியிருக்கிறார் சூர்யா. நீண்ட இடைவேளைக்குபின் அவர் கேரக்டர், கெட்அப், அவர் நடித்த காட்சிகள் கவர்கின்றன. குறிப்பாக, கருப்பசாமியாக அவர் ஆடும் ஆட்டம், அதிரடி சண்டைக்காட்சிகள், பேசும் வசனங்கள் ஈர்க்கின்றன. நீதிக்காக போராடும் வக்கீல் கடவுளாக அவர் கேரக்டரும், அதன் மூலம் சொல்ல வரும் கருத்துகளும், குறிப்பாக கடவுள் நம்பிக்கை காட்சிகளும் படத்தை கமர்ஷியலாக்கி இருக்கிறது. கிளைமாக்சில் அவர் கருப்பசாமி வேடத்தில் ஆடுகிற ஆட்டமும், கடைசி டுவிஸ்ட், அடுத்த அறிவிப்பும் அவர் ரசிகர்களுக்கு விருந்து. சூர்யா கடவுளாக வருவதால் திரிஷா இருந்தாலும் காதல் காட்சி இல்லை. கலர்புல் பாடல் இல்லை. அதேசமயம், சூர்யா, திரிஷா சம்பந்தப்பட்ட கருப்பு கோயில் பாட்டு பிரமாண்டம்.

ஆர்.ஜே.பாலாஜி 'பேபி கண்ணன்' என்ற வக்கீலாக, வில்லனாக வருகிறார். சில இடங்களில் தனக்கே உரியை ஸ்டைலில் டயலாக் மூலம், நடிப்பு மூலம் ரசிக்க வைக்கிறார். படத்தின் இயக்குனர் அவரே என்பதால் தனக்காக காட்சிகளை, தன் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்தி இருக்கிறார். அது சலிக்க வைக்கிறது. இன்னொரு பவர்புல் வில்லன் இருந்து இருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். ஆர்.ஜே.பாலாஜியின் காமெடி வில்லத்தனம் படத்தின் மைனஸ். கிளைமாக்ஸ் வரை தனது கேரக்டரை அவர் இழுத்து, தனக்கு பில்டப் கொடுத்ததும் படத்தின் பெரிய மைனஸ்.

திரிஷாவுக்கு வயதாகிவிட்டது தெரிகிறது. சில இடங்களில், ஒரு சண்டைக்காட்சியில் அவருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. மற்றபடி, பேச ஒன்றும் இல்லை. நல்ல நடிகைகளான ஷிவதா, லப்பர் பந்து சுவாசிகாவை இயக்குனர் வீணடித்து இருக்கிறார். வழக்கமான அரசியல்வாதி வில்லனாக வந்து வேல.ராமமூர்த்தி போரடிக்கிறார். கோடாங்கி வடிவேலு, தீபா, மாறன் சீன்கள் ஓகே. காமெடிக்கு என தனி ஆட்கள், தனி டிராக் இல்லை. இவர்களை தவிர, ஜட்ஜ் ஆக வரும் நட்டியின் நடிப்பும், அவர் சம்பந்தப்பட்ட கோர்ட் சீன்கள் நீதித்துறையின் இன்னொரு பக்கத்தை தைரியமாக காண்பித்து இருக்கின்றன. நீதி கிடைக்காமல் பல ஆண்டுகளாக போராடும் பூபாலன் கேரக்டரும் மனதில் நிற்கிறது

கோர்ட், சண்டைக்காட்சி, கருப்பசாமி சம்பந்தப்பட்ட சீன்களில் கேமராமேன் ஜி.கே .விஷ்ணு திறமை தெரிகிறது. இந்த கதைக்கு சாய் அபயங்கர் செட் ஆகவில்லை என்றே தெரிகிறது. அவர் பாடல், பின்னணி இசை ஸ்டைலாக இருந்தாலும், மண்மணத்துடனான கருப்பு கதையுடன் ஒட்டவில்லை. கருப்பு வரும் காட்சிகளில் கூட கிராமிய இசை, சாமியாட வைக்கும் இசை இல்லை. பாடல்களிலும் வரிகள் புரியவில்லை. லோக்கலான சண்டைக்காட்சிகளிலும் மார்டன் மியூசிக் அன்னியமாக இருக்கிறது. கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கிராபிக்சை குறைத்து இருந்தால் அந்த இடம் இன்னும் வீரியமாக இருந்து இருக்கும்.

வழக்கமான கோர்ட் நடைமுறை, சட்டத்தின் ஓட்டைகள், நீதிபதியின் மறுபக்கம், தவறான சிலரின் ஆதிக்கத்தால் நீதி கிடைக்காமல் சாதாரணமானவர்கள் எப்படி தவிக்கிறார்கள், பணம், பவரால் சட்டம் எப்படி வளைகிறது என்பதை சொல்லிவிட்டு, கடவுள் நம்பிக்கையை உயர்த்தி பிடித்ததிலும் படக்குழுவை பாராட்டலாம். படம் பார்க்கும் பலருக்கும் தங்கள் குலதெய்வம் நினைவில் வரும். அதேப்போல் விஜயின் ‛லியோ' படம் தொடர்பான காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளது.

படத்தின் முதற்பாதியில் ரொம்பநேரம் சூர்யா வரவே இல்லை. இது, ஆர். ஜே.பாலாஜி நடித்த படமோ என்ற சந்தேகம் வருகிறது. பிற்பாதியிலும் சூர்யாவுக்கு சில இடங்களில் முக்கியத்துவம் இல்லை. அப்பவும் இது ஆர்.ஜே.பாலாஜி ஆதிக்கமோ என தெரிகிறது. அவர் படத்தில் சூர்யா கவரவ வேடத்தில் நடித்து இருக்கிறரோ என்ற எண்ணம் சிலசமயம் வருகிறது. அதுவும் படத்தின் பெரிய மைனஸ். அவர் காட்சிகளை குறைத்து, ஹீரோ காட்சிகளை அதிகரித்து இருந்தால் படம் இன்னும் பேசப்பட்டு இருக்கும். அதேபோல் கிளைமாக்சும் ரொம்பவே இழுக்கிறது. முந்தைய சூர்யா படங்களை விட கருப்பு எவ்வளவோ மேல் என்பது ஆறுதல்.