Paristamil Navigation Paristamil advert login

ஓமனில் இந்திய சரக்கு கப்பல் மூழ்கடிப்பு; மத்திய அரசு கடும் கண்டனம்

ஓமனில் இந்திய சரக்கு கப்பல் மூழ்கடிப்பு; மத்திய அரசு கடும் கண்டனம்

15 வைகாசி 2026 வெள்ளி 06:35 | பார்வைகள் : 284


ஓமன் அருகே ட்ரோன் தாக்குதலால் இந்திய சரக்கு கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த 'ஹாஜி அலி' என்ற சரக்கு கப்பல் ஒன்று நேற்று அதிகாலை, மேற்காசிய நாடான ஓமனின் வடக்கு கடற்கரையில் உள்ள லிமா அருகே சென்று கொண்டிருந்தது.

சோமாலியாவில் இருந்து ஷார்ஜாவிற்கு கால்நடைகளை இக்கப்பலில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் அல்லது ஏவுகணை என சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத வெடிபொருளால் இக்கப்பல் தாக்கப்பட்டது.

இதையடுத்து கப்பலில் தீ பற்றியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கப்பல், ஓமனை ஒட்டிய கடற்பகுதியில் மூழ்கியது. கப்பலில் இருந்த ஒரு மாலுமி உட்பட 14 இந்திய பணியாளர்களும் ஓமன் அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக கப்பல் உரிமையாளர் சுல்தான் அகமது தெரிவித்துள்ளார். கப்பல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாரென்று உடனடியாக தெரியவில்லை. ஆனால், நம் வெளியுறவு அமைச்சகம் இத்தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளதுடன், கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

மேலும், வணிக கப்பல்கள் மற்றும் சிவிலியன் மாலுமிகள் தொடர்ந்து குறி வைக்கப்படுவதை கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் - அமெரிக்கா மோதல் தொடர்பான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இப்பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு கவலைக்குரியதாக மாறியுள்ளது.

போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவை நோக்கி வந்த இரு எல்.பி.ஜி., எனப்படும் சமையல் எரிவாயு டேங்கர் கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மார்ஷல் தீவுகள் கொடியை ஏந்தியுள்ள 'சிமி' எனும் கப்பல், 19,965 டன் எல்.பி.ஜி., உடன் கடந்த 13ம் தேதி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளது. இக்கப்பல் நாளை மறுநாள் குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வியட்நாம் நாட்டின் கொடியுடன் கூடிய 'என்.வி., ஷைன்' எனும் கப்பல், 46,427 டன் எல்.பி.ஜி., உடன், வரும் 18ம் தேதி நியூ மங்களூரை வந்தடையும் என கூறப்படுகிறது. இரு கப்பல்களிலும் உள்ள சரக்குகள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமானவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து, 12  எல்.பி.ஜி., டேங்கர்கள் மற்றும் ஒரு கச்சா எண்ணெய் டேங்கர் உட்பட 13 இந்திய கொடி கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட்சின் கிழக்கு கடற்கரையில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றை, அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்கள் கைப்பற்றி, ஈரான் கடல் எல்லையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சின் புஜைரா துறைமுகத்திற்கு வடகிழக்கே 70 கி.மீ., தொலைவில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றை, ஆயுதமேந்திய குழு ஒன்று கைப்பற்றி எடுத்து செல்வதாக பிரிட்டனின் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், கப்பலின் பெயரை குறிப்பிடவில்லை.

மேலும், இது குறித்து அம்மையம் விசாரித்து வருவதாக கூறியுள்ளது. மேலும், இக்கப்பல் கைப்பற்றல் சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், கடந்த வாரம், 'ஓஷன் கோய்' என அடையாளம் காணப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்றை, ஓமன் வளைகுடாவில் ஈரான் ராணுவம் கைப்பற்றியிருந்தது. ஆகையால், இது ஈரானின் வேலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது