Paristamil Navigation Paristamil advert login

கெஜ்ரிவாலுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை: டில்லி ஐகோர்ட் அதிரடி

கெஜ்ரிவாலுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை: டில்லி ஐகோர்ட் அதிரடி

15 வைகாசி 2026 வெள்ளி 10:48 | பார்வைகள் : 188


ஆம் ஆத்மி தலைவர், கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது  நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை துவங்கப் போவதாக டில்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

டில்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் இருந்து டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால்,   மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேர் கடந்த பிப்ரவரி 27 ல் டில்லி விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இதற்கு எதிராக டில்லி ஐகோர்ட்டில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அமர்வில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டது.

ஆனால், நீதிபதி ஆர்எஸ்எஸ் அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் என்பதாலும், அவரது பிள்ளைகள் மத்திய அரசின் வழக்கறிஞராக பணியாற்றுவதாலும், இந்த வழக்கை நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா விசாரிக்கக்கூடாது என டில்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஸ்வர்ண காந்த சர்மா, ' கெஜ்ரிவால் முன்வைக்கும் சந்தேகங்கள் ஏற்புடையதாக இல்லை என்று கூறி வழக்கு விசாரணையில் இருந்து விலக மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து  அந்த நீதிபதி முன்பாக விசாரணைக்கு ஆஜராக போவதில்லை என்றும், இதற்காக சிறை செல்லவும் தயாராக இருப்பதாக கெஜ்ரிவால்  கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா கூறுகையில்,   நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நேரத்தில்,  இணையதளங்கள் வழியில் இந்த நீதிமன்றத்தை நோக்கி மறைமுக குற்றச்சாட்டுகளை வைத்து கட்டுக்கதை கட்டமைக்கப்பட்டது.  இது அரசியல் அதிகாரங்களை கொண்ட நீதிமன்ற அவமதிப்பாளர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.

காணொலி மூலம் என் குடும்ப உறுப்பினர்கள் இழிவுபடுத்தப்பட்டனர். அது என்னை மட்டுமல்ல, நீதித்துறையையும் அச்சுறுத்தும் நோக்கத்தில்  செய்யப்பட்டது எனக்கூறியதுடன்,  கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை துவங்கப்போவதாக தெரிவித்தார்."