Paristamil Navigation Paristamil advert login

திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு திமுக தான் காரணம்; அமைச்சர் நிர்மல்குமார்

திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு திமுக தான் காரணம்; அமைச்சர் நிர்மல்குமார்

15 ஆனி 2026 திங்கள் 13:49 | பார்வைகள் : 145


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதில் உள்ள பிரச்னைக்கு காரணம் தி.மு.க.,தான்'' என அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

மதுரை மாவட்டம் மேலுார் பகுதியில் மாற்றுக் கட்சியினர் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணா முன்னிலையில் த.வெ.க., வில் இணைந்தனர். பின்னர் அமைச்சர் கூறியதாவது:திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலைக்கு காரணம் தி.மு.க., தான். இப்பிரச்னையில் மக்களின் அமைதியை கருத்தில் கொண்டு சட்டப்பூர்வமாக தீர்வு காணப்படும்.

மின்தடை ஏற்படும் பகுதிகளை கண்காணிக்க 125 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 500 பேர் கொண்ட குழுக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. மாநில அளவில் 3.5 கோடி மின்பயனாளிகள் உள்ள நிலையில் புகார்களுக்கு உடனே தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்சார கட்டமைப்பு பல ஆண்டுகளாக பின்தங்கியுள்ளது. தற்போதைய நிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். ஸ்டாலின், பழனிசாமி இணைந்து ஆட்சி அமைக்க முயன்றார்களா என்பது குறித்து அவர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்

குடும்ப நலனை மையமாகக் கொண்டு அரசியல் நடத்தினால் கட்சித் தொண்டர்கள் விலகுவது இயல்பு. முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்குவது மாநில உரிமை சார்ந்த விஷயம். இதில்உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் . அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை ஆய்வு செய்து திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.