தமிழகத்தில் அ.தி.மு.க.,வும், மே.வங்கத்தில் மம்தா கட்சியும்...மேலும் தேய்கின்றன!
15 ஆனி 2026 திங்கள் 12:35 | பார்வைகள் : 209
சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததால், தமிழகத்தில் அ.தி.மு.க.,வும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியும் மேலும் மேலும் தேய்ந்து வருகின்றன. அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் பலர், த.வெ.க.,வில் நேற்று ஐக்கியமாகினர். மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவை, திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் சுதீப் பந்தோபாத்யாய், சதப்தி ராய் ஆகியோர் சந்தித்து பேசியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
eமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வி அடைந்தது. ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், 169 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க., வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
அதிலும், கன்னியாகுமரி, திருக்கோவிலுார், பரமத்தி வேலுார், பழனி ஆகிய நான்கு தொகுதிகளில், 700 ஓட்டுகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தான் அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததன் மூலம், பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை அ.தி.மு.க., இழந்தது.
இந்நிலையில், த.வெ.க., ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க, தி.மு.க.,வுடன் இணைந்து செயல்பட அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டதாக, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி
ஆகியோர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்; தொடர்ந்து, பழனிசாமிக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளை அணி திரட்டி, தனி அணியாக செயல்பட துவங்கினர். கடந்த மே 13ம் தேதி சட்டசபையில் நடந்த த.வெ.க., அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில், அரசுக்கு ஆதரவாக 25 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்தனர். இதனால், அதிருப்தி அணியில் இருந்த அனைவரின் கட்சி பதவிகளையும் பழனிசாமி பறித்தார்.
தொடர்ந்து, த.வெ.க., அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என, அதிருப்தி அணி
எம்.எல்.ஏ.,க்கள் காத்திருந்தனர். ஆனால், அவர்களை தன் அமைச்சரவையில் சேர்க்க, முதல்வர் விஜய் மறுத்து விட்டார். இதனால், அதிருப்தி அணியில் இருந்த எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் பழனிசாமியிடம் இணைந்தனர். ஆனாலும், பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு தொகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து, த.வெ.க.,வில் இணைந்தனர்.
இதனால், அ.தி.மு.க.,வின் பலம் 43 ஆக குறைந்தது. அதிலும், எம்.எல்.ஏ.,க்களாக உள்ள முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் இன்னும் பழனிசாமியை சந்திக்கவில்லை; அவர்கள் அதிருப்தியாளர்களாகவே நீடிக்கின்றனர்.
இச்சூழலில், அ.தி.மு.க.,வை கரைக்கும் விதமாக, அக்கட்சியின் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க, த.வெ.க., தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த வாரம் முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், சிவபதி, விருதுநகர் மாவட்ட செயலர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர்செல்வம், முருகன், சண்முகம், காமராஜ் என, 250க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.,வில் இணைந்தனர். மறுபக்கத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், தி.மு.க.,வில் இணைந்தார்.
இந்நிலையில், சென்னை பனையூர் அலுவலகத்தில், மாற்றுக் கட்சியினர் த.வெ.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. அதில், முன்னாள் அமைச்சர் பச்சைமால், வடசென்னை தெற்கு மாவட்ட செயலர் பாலகங்கா, முன்னாள் எம்.பி.,க்கள் வனரோஜா, இளவரசன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அரக்கோணம் ரவி, முருகேசன், நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி உட்பட 30க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள், த.வெ.க.,வில் இணைந்தனர். அவர்களோடு சேர்ந்து, பா.ஜ.,வில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., விஜயதரணியும் த.வெ.க.,வில் ஐக்கியமானார்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், த.வெ.க., அல்லது தி.மு.க.,வில் இணைய, இரு தரப்பிடம் பேச்சு நடத்தி வருகிறார். அதேபோல், சங்கராபுரம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராகேஷ் உட்பட, இன்னும் பல அ.தி.மு.க., மாவட்ட செயலர்களை தங்கள் பக்கம் இழுக்க, த.வெ.க., தரப்பில் தீவிர பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க., நிர்வாகிகள் பலரும் இப்படி சாரை சாரையாக த.வெ.க.,வில் இணைந்து வருவது குறித்து, இதுவரை பழனிசாமி வெளிப்படையாக எதுவுமே பேசவில்லை; மாறாக, அவர்களை தடுக்கவும் முற்படவில்லை. 'போகிறவர்கள் போகட்டும்; இருப்பவர்களுக்கு பதவி கொடுக்க தயாராக இருக்கிறேன்' என, கட்சியினரிடம் பேசி வருகிறார்.
இது குறித்து, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி கூறுகையில், ''அ.தி.மு.க.,வில் இருந்து சாரை சாராயாக யாரும் செல்லவில்லை. பலன் அடைந்தவர்கள், பலன் தேடி ஓடிக் கொண்டு இருக்கின்றனர். பலன் அடையாத நிலையிலும், கட்சியின் கொள்கையில் விடாப்பிடியாக இருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள், பழனிசாமியின் தலைமையை ஏற்று சிறப்பாக செயல்படுகின்றனர்,'' என்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan