Paristamil Navigation Paristamil advert login

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

14 ஆனி 2026 ஞாயிறு 17:45 | பார்வைகள் : 281


நடப்பு 2026ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 7 சதவீதத்தால்   வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.


மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, கடந்த வெள்ளிக்கிழமை  வர்த்தக முடிவில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 331.42 ரூபாயாகவும், விற்பனை விலை 341.36 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாய் கடந்த சில மாதங்களாகச் சந்தித்து வரும் இந்த திடீர் பின்னடைவிற்கான முக்கிய காரணத்தை மத்திய வங்கி விளக்கியுள்ளது.

“கடந்த 2026 பெப்ரவரி மாதப் பிற்பகுதியில் இருந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தீவிர போர் மற்றும் மோதல் சூழ்நிலை காரணமாக, உலகளாவிய ரீதியில் விநியோகக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடித் தாக்கங்கள் இலங்கையின் வெளிநாட்டுத் துறையிலும் எதிரொலித்ததே ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்கான முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.”

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக இலங்கையின் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்துள்ளதுடன், டொலருக்கான தேவையும் உள்நாட்டில் அதிகரித்துள்ளது.

டொலருக்கு நிகராக ரூபாய் பலவீனமடைந்து வருவதனால், வரும் காலங்களில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனினும், நிலைமையைச் சீரமைக்கத் தேவையான நிதிக் கொள்கை உத்திகளை மத்திய வங்கி உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.