Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் பயங்கர வாகன விபத்து - 5 சிறுவர்கள் பலி!

கனடாவில் பயங்கர வாகன விபத்து -  5 சிறுவர்கள் பலி!

14 ஆனி 2026 ஞாயிறு 09:06 | பார்வைகள் : 291


கனடாவின் ஒண்டாரியோ மாகாணம் மேப்லெட்டன் நகரில் நேரிட்ட பயங்கர சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக ஒண்டாரியோ மாகாண காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணியளவில் கிச்சனர் நகருக்கு வடக்கே உள்ள கோனெஸ்டோகோ ஏரிக்கு அருகில், '4த் லைன்' மற்றும் 'வெல்லிங்டன் ரோடு 12' சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஒரு எஸ்.யூ.வி ரக காரும், ஒரு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான வேனில் 10 பேரும், எஸ்.யூ.வி காரில் ஒருவரும் இருந்துள்ளனர். வேனில் இருந்தவர்களில் 4, 6, 8, 10 மற்றும் 12 வயதுடைய ஐந்து சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவர்கள் அனைவரும் உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்கள் ஆவர். விபத்துக்குள்ளான வேனில் சிறுவர்களின் பெற்றோர், பாட்டி மற்றும் 15 மாதக் குழந்தை உட்பட 10 பேர் பயணித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த நான்கு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்களின் தாய் ஹாமில்டன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையிலும், தந்தை லிஸ்டோவல் மருத்துவமனையில் சீரான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். எஸ்.யூ.வி காரை ஓட்டி வந்த நபரின் கால்கள் உடைந்த நிலையில், அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட இந்த குடும்பம் எல்மிரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதி பல மணிநேரம் மூடப்பட்டு, சனிக்கிழமை மாலை 4 மணியளவிலேயே மீண்டும் திறக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்துப் புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து ஒண்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு தனது சமூக ஊடகப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.