Paristamil Navigation Paristamil advert login

பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு சிந்து நதி நீர் கிடையாது! ராஜ்நாத் சிங்

பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு சிந்து நதி நீர் கிடையாது! ராஜ்நாத் சிங்

14 ஆனி 2026 ஞாயிறு 13:44 | பார்வைகள் : 177


பயங்கரவாதத்தை தண்ணீர் ஊற்றி வளர்க்கும் பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு சிந்து நதி நீர் கிடைக்க கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தெலுங்கானா பாஜ சார்பில் ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்ததன் மூலம், பயங்கரவாதத்தை தண்ணீர் ஊற்றி வளர்ப்பவர்கள் எங்களிடமிருந்து தண்ணீரை எதிர்பார்க்கக் கூடாது என்று நாங்கள் கூறினோம்.

பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களுக்கும் மனிதகுலத்தின் எதிரிகளுக்கும் சிந்து நதியின் நீரை நாங்கள் சென்றடைய விடமாட்டோம். கடந்த 12 ஆண்டு கால பாஜ ஆட்சியில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, நாட்டைப் பெருமளவில் நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதில் ஏற்பட்ட முன்னேற்றம், ஜிஎஸ்டி அமலாக்கம், நாடு தழுவிய மின்மயமாக்கல் மற்றும் நீதித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

ஒரு காலத்தில், 370வது சட்டப்பிரிவை யாராலும் ரத்து செய்ய முடியாது என்று காங்கிரஸ் கூறிவந்தது. ஆனால், எங்கள் அரசு அதை எளிதாக ரத்து செய்ததை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.ஒரு காலத்தில் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட காஷ்மீர், தற்போது சுற்றுலா, முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் வளர்ச்சியை கண்டு வருகிறது.

ஸ்ரீநகரின் லால் சவுக்கில் மூவர்ணக் கொடி பறக்கிறது, அங்கு முதல் முறையாக கிருஷ்ண ஜன்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. மேலும் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

சமாதான மொழியைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு எப்படிப் பதிலடி கொடுக்க வேண்டும் என்பது இந்தியாவிற்குத் தெரியும் என்பதை ஆப்பரேஷன் சிந்தூர் உலகிற்குக் காட்டியுள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.