மம்தாவின் அரசியல் வாரிசான அபிஷேக் வீட்டில் ரெய்டு!
14 ஆனி 2026 ஞாயிறு 06:19 | பார்வைகள் : 191
மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., - எம்.பி.,யும், முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசியல் வாரிசுமான அபிஷேக் பானர்ஜி வீட்டில், இன்று போலீசார் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்கத்தில் பா.ஜ., முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் புதிதாக ஆட்சி அமைந்துள்ளது. அப்போது முதல், அம்மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய முஸ்லிம்களை மீண்டும் அவர்களது தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அதே போல், முந்தைய ஆட்சியின் போது நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அந்த வகையில், பக்ஷிம் மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள சல்போனி போலீஸ் ஸ்டேஷனில், திரிணமுல் காங்., - எம்.பி.,யும், முன்னாள் முதல்வர் மம்தாவின் உறவினருமான அபிஷேக் பானர்ஜியின் தனி உதவியாளர் சுமித் ராய் மீது நிதி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முயற்சி செய்தனர்.
இந்நிலையில், சல்போனி போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த போலீசார், கொல்கட்டா போலீசாரின் உதவியுடன், இன்று அதிகாலை 3:00 மணி அளவில் சுமித் ராயை தேடி காளிகாட்டில் உள்ள அபிஷேக் பானர்ஜியின் வீட்டிற்குள் நுழைந்தனர். போலீசார் பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து, பூட்டிய கதவை உடைத்துக் கொண்டு போலீசார் வீட்டிற்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தகவல் அறிந்த மம்தா, உடனடியாக அபிஷேக்கின் வீட்டிற்கு வந்து, சோதனை முடியும் வரை அங்கேயே இருந்தார். அதிகாலையில் இருந்து நான்கு மணி நேரம் வரை போலீசார் சல்லடை போட்டு தேடியும், சுமித் ராயை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், 'சுமித் ராயின் மொபைல் போன் சிக்னல் கடைசியாக காளிகாட்டில் உள்ள அபிஷேக்கின் வீட்டையே காண்பித்தது. அதன் காரணமாகவே அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது' என, தெரிவிக்கப்பட்டது.
இந்த சோதனைக்கு பின் பேசிய அபிஷேக், ''போலீசார் என் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். பூட்டியிருந்த கதவை உடைத்து நுழைந்தவர்கள், வீடு முழுதும் சோதனையிட்டனர்,'' என குற்றஞ்சாட்டினார். இந்த சோதனையில் போலீசார் ஏதேனும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனரா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேற்கு வங்க தேர்தல் முடிவுக்கு பின், திரிணமுல் காங்., கட்சிக்கு நெருக்கடி முற்றி வருகிறது. குறிப்பாக அபிஷேக் பானர்ஜி மீது மட்டும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மூன்று நாட்களுக்கு முன்பாக, திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ.,க்களின் போலி கையெழுத்து தொடர்பாக அபிஷேக்கிடம் சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திருப்தி இல்லாததால், மீண்டும் இன்று நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதே போல், துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு நாளை ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத் துறை அழைப்பு விடுத்துள்ளது. சைபர் குற்ற புகார் தொடர்பாக வரும் 16ம் தேதி ஆஜராகுமாறு சி.ஐ.டி., உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இந்த சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திரிணமுல் காங்., விமர்சித்துள்ளது.
திரிணமுல் காங்., கட்சியின் மூத்த தலைவரும் காமர்ஹட்டி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான மதன் மித்ராவுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட ஏழு இடங்களில் ஈ.டி., எனப்படும், அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
காமர்ஹட்டி மற்றும் அதன் அருகே உள்ள தீட்டாகர் மாநகராட்சிகளில், இடைதரகர்கள் மூலம் 125 சட்டவிரோத பணி நியமனங்களை அவர் வழங்கியதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதற்காக பணம் மற்றும் தங்கத்தை அவர் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அது தொடர்பான ஆவணங்களை தேடியே இந்த சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே வழக்கில் தொழிலதிபர் அயன் சில் என்பவர் கடந்த 2023ல் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாகவே மதன் மித்ராவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்ததாக தெரிகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan