Paristamil Navigation Paristamil advert login

துரித உணவகங்களை சுத்தம் செய்யும் பணிகளில் சட்டவிரோத தொழிலாளர்கள்– நால்வர் கைது!!

துரித உணவகங்களை சுத்தம் செய்யும் பணிகளில் சட்டவிரோத தொழிலாளர்கள்– நால்வர் கைது!!

13 ஆனி 2026 சனி 07:30 | பார்வைகள் : 959


சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டு நபர்களை துரித உணவகங்களில் சுத்தம் செய்யும் பணிகளுக்காக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெரிய கும்பல் காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு முக்கிய சந்தேக நபர்கள் ஜூன் மாதம் 2ம் திகதி Garges-lès-Gonesse மற்றும் La Courneuve பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக Val-de-Briey அரசுத் தரப்பு வழக்கறிஞர் Sophie Partouche தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் தொழிற்துறை சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி, பிரபல துரித உணவகங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அந்த நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் பல ஆண்டுகளாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வலையமைப்பு 2011ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டவிரோத குடியேற்ற உதவி, அனுமதியில்லாத வெளிநாட்டவர்களை குழுவாக வேலைக்கு அமர்த்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முக்கிய குற்றச்சாட்டு நபர்களில் ஒருவரை நீதிமன்றம் தற்காலிகக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வருமான வரித்துறைக்கு இந்த மோசடியால் சுமார் ஒரு மில்லியன் யூரோக்கள் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.