Paristamil Navigation Paristamil advert login

மாணவர் உதவித்தொகை உயர்வு: தேசிய சபையில் மசோதா நிறைவேற்றம்!!

மாணவர் உதவித்தொகை உயர்வு: தேசிய சபையில் மசோதா நிறைவேற்றம்!!

12 ஆனி 2026 வெள்ளி 07:30 | பார்வைகள் : 709


தேசிய சபையில் மாணவர்களுக்கான சமூக அடிப்படையிலான உதவித்தொகைகளை ஆண்டுதோறும் பணவீக்கத்திற்கு ஏற்ப தானாக உயர்த்தும் மசோதா முதல் வாசிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் மற்றும் வெளிநாட்டு பிராந்தியங்களைச் சேர்ந்த GDR குழு முன்வைத்த இந்த மசோதாவுக்கு இடதுசாரி கட்சிகளும் தேசிய ஒன்றிய கட்சியும் ஆதரவு தெரிவித்தன. 

இந்த புதிய சட்ட முன்மொழிவின் கீழ் மாணவர் உதவித்தொகைகள் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் பணவீக்க அளவுக்கு உயர்த்தப்படும். மேலும் தற்போது 10 மாதங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை இனி 12 மாதங்களுக்கும் வழங்கப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஆனால், அரசின் நிதிச்சுமை சுமார் 500 மில்லியன் யூரோக்களை மீறும் எனக் குறிப்பிட்டு  வலதுசாரி கட்சிகள் வாக்கெடுப்பில் தவிர்ப்பு நிலைப்பாடு எடுத்தன.

அதேவேளை, குறைந்த வருமானம் கொண்ட முதியோருக்கான Aspa உதவித்தொகை தொடர்பான மற்றொரு மசோதாவும் தேசிய சபையில் நிறைவேற்றப்பட்டது. தற்போது உதவித்தொகை பெற்றவர்களின் சொத்து மதிப்பு ஒரு குறிப்பிட்ட அளவை மீறினால், அவர்கள் மரணித்த பின் அரசாங்கம் வழங்கிய தொகையை மீளப் பெறுகிறது.

இதனால் ஆயிரக்கணக்கான முதியவர்கள் உதவித்தொகையை பெறாமல் தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திருத்தத்தின் மூலம் வீட்டில் வசிக்கும் ஓய்வுபெற்றவர்களுக்கு சிறப்பு வீட்டு சலுகை வழங்கப்பட்டு, சில சந்தர்ப்பங்களில் அரசின் மீளப்பெறும் நடைமுறை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.