Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!

ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!

11 ஆனி 2026 வியாழன் 05:14 | பார்வைகள் : 207


நிடி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க தலைநகர் டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். தொடர்ந்து, காங்., - பார்லி., குழு தலைவர் சோனியா, அவரது மகனும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுலையும் அவர் சந்தித்தார்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், இடதுசாரி, வி.சி.க., ஆதரவுடன், மே 10ல் முதல்வராக விஜய் பதவியேற்றார்; அரசு அமைக்க உதவிய கூட்டணி கட்சிகளுக்கு, அமைச்சரவையில் அவர் பங்கும் கொடுத்தார்.

முதல்வரான பின், கடந்த 27ல் முதன் முறையாக டில்லி வந்த விஜய், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக அளித்தார். தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் விஜய் சந்தித்தார்; அதன்பின், யாரையும் சந்திக்காமல் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க, மூன்று நாட்கள் பயணமாக தமிழக முதல்வர் விஜய் நேற்று டில்லி வந்தார். விமான நிலையத்திலிருந்து நேராக தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த அவரை, தலைமை செயலர் சாய்குமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

சில மணி நேர ஓய்வுக்கு பின், தமிழ்நாடு இல்லத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு புறப்பட்ட முதல்வர் விஜய், மாலை 4:30 மணி அளவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்தார். ஜனாதிபதிக்கு முர்முவுக்கு பூங்கொத்து கொடுத்த அவர், சிறிது நேரம் பேசினார். பின், அங்கிருந்து துணை ஜனாதிபதி அலுவலகத்திற்கு முதல்வர் விஜய் புறப்பட்டார்.

மாலை 5:45 மணிக்கு, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை அவர் நேரில் சந்தித்தார். அப்போது, இருவரும் பூங்கொத்து அளித்து பரஸ்பரம் மரியாதையை பகிர்ந்து, சிறிது நேரம் பேசினர்.

இந்த சந்திப்பை முடித்து, ஜன்பத் சாலையில் உள்ள வீட்டில், காங்., - பார்லி., குழு தலைவர் சோனியாவை முதல்வர் விஜய் சந்தித்தார். காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலும் உடன் இருந்தார். அப்போது, தமிழகத்தில் அரசு அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்ததற்காக முதல்வர் விஜயும், தமிழக அமைச்சரவையில் பங்கு மற்றும் ராஜ்யசபா எம்.பி., சீட் அளித்ததற்காக காங்., தலைவர்களும் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறினர்.

பின், இ.கம்யூ., தலைவர் டி.ராஜா விடுத்திருந்த அழைப்பை ஏற்று, அவரை சந்திக்க முதல்வர் விஜய் புறப்பட்டார். டில்லி இந்திரஜித் குப்தா மார்க்கில் அமைந்துள்ள அக்கட்சி அலுவலகமான அஜய் பவனுக்கு சென்ற முதல்வர் விஜயை, வாசலுக்கே வந்து டி.ராஜா வரவேற்றார். பின், அவருடன் முதல்வர் விஜய் சில நிமிடங்கள் பேசினார். இதன்பின், தமிழ்நாடு இல்லத்திற்கு முதல்வர் விஜய் திரும்பினார்.

அமித் ஷா உடன் சந்திப்பு?

நிடி ஆயோக் ஆலோசனை கூட்டம் இன்று காலை 9:15 மணிக்கு துவங்குகிறது. ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் காலை, மாலை என இரு கட்டங்களாக இக்கூட்டம் நடக்கிறது.

இதில், அகர வரிசைப்படி மாநில முதல்வர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படும். அந்த வகையில், முதல்வர் விஜய்க்கு பிற்பகலில் பேச வாய்ப்பு கிடைக்கும். அப்போது, தமிழகத்தின் நிதி தேவைகள் குறித்து அவர் விரிவாக பேசுவார்.

காலையில் துவங்கும் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் யாரும், கூட்டம் முடியும் வரை வெளியில் வர முடியாது; அனைவரும் அரங்கிலேயே இருப்பர். எனவே, மத்திய அரசின் மூத்த அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் அனைவரும், ஒரே இடத்தில் பல மணி நேரம் இருப்பர் என்பதால், பிரதமர் மோடி மற்றும் முதல்வர்கள் பலரும், நெருங்கி சாதாரணமாக உரையாடும் வாய்ப்பு உள்ளது.

அந்த வகையில், பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் உரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அவர் சந்தித்து பேசுவார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய் டில்லி பயணத்தை முடித்து, நாளை தனி விமானத்தில் கர்நாடகாவின் மங்களூரு செல்லும் முதல்வர் விஜய், அங்கிருந்து உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க.,வை தொடங்கி 1977ல் முதல்வரான எம்.ஜி.ஆர்., கொல்லுார் மூகாம்பிகையின் தீவிர பக்தர்; அடிக்கடி மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். எம்.ஜி.ஆர்., வழியில் தனிக்கட்சி தொடங்கி முதல்வராகியுள்ள விஜயும், கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.