Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய குடியேற்றம் புகலிட ஒப்பந்தம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய குடியேற்றம் புகலிட ஒப்பந்தம்

10 ஆனி 2026 புதன் 14:06 | பார்வைகள் : 149


சர்வதேச அளவில் வறுமை, வேலைவாய்ப்பின்மை, சிறந்த எதிர்காலத்தைத் தேடித் தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறுதல், போர், உள்நாட்டு வன்முறை, அரசியல் பழிவாங்கல்கள், உயிருக்கு அச்சுறுத்தல் சர்வதேச எல்லைகளை நோக்கி தினசரி ஆயிரக்கணக்கானவர்கள் நாளாந்தம் நகர்ந்தவண்ணம் உள்ளனர்.

குறிப்பாக, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கி வரும் இவர்களின் எண்ணிக்கை கடந்த தசாப்தத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இப்பின்னணியில், ஐரோப்பிய ஒன்றியம் தனது எல்லைகளை ஒழுங்குபடுத்தவும், உறுப்பு நாடுகளுக்கு இடையே நிலவும் சுமைப் பகிர்வுப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் நீண்டகாலமாகப் போராடி வந்தது.

இதன் இறுதி வடிவமாக, 2026 ஜூன் 12 அன்று ஐரோப்பிய ஒன்றியம் தனது 'புதிய குடியேற்றம் மற்றும் புகலிடத்திற்கான ஒப்பந்தம்' (Pact on Migration and Asylum) மற்றும் மேம்படுத்தப்பட்ட 'யூரோடாக்' (Eurodac) தரவுத்தள அமைப்பு ஆகியவற்றை உத்தியோக பூர்வமாக நடைமுறைக்குக் கொண்டுவருகிறது.

புதிய ஒப்பந்தத்தின் அவசியத்தைப் புரிந்துகொள்ள, அதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த 'டப்ளின் ஒழுங்குமுறை' (Dublin Regulation) பற்றிய புரிதல் அவசியமானது. முந்தைய விதிகளின்படி, ஒரு புகலிடக் கோரிக்கையாளர் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையும் போது, அவர் முதலில் எந்த உறுப்பு நாட்டில் கால்பதிக்கிறாரோ, அந்த நாடே அவரது புகலிட விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

இக்கொள்கை புவியியல் ரீதியாக ஐரோப்பாவின் எல்லைகளில் அமைந்துள்ள இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், மால்டா மற்றும் சைப்ரஸ் போன்ற நாடுகளுக்குப் பெருமளவிலான சுமையைத் தந்தது. 2015 மற்றும் அதன்பின்னர் ஏற்பட்ட அகதிகள் நெருக்கடியின் போது எல்லையோர நாடுகள் பல்லாயிரக்கணக்கான அகதிகளைக் கையாள முடியாமல் தடுமாற்றத்தைச் சந்தித்திருந்தன.

எல்லையோர நாடுகளில் முறையாகப் பதிவு செய்யாமல் ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற உள்நோக்கி அமைந்துள்ள நாடுகளுக்கு அகதிகள் பயணித்ததால் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு இடையே கடுமையான அரசியல் முரண்பாடுகள் தீவிரமடைந்திருந்தன.

மேற்படி நிலைமையை முடிவுக்கு கொண்டுவந்து எல்லைக் கட்டுப்பாட்டிற்கும் மனித உரிமைகளுக்கும் இடையே புதிய சமநிலையை உருவாக்கவே இந்த 2026ஆம் ஆண்டின் ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம், எல்லையை வந்தடைபவர்களை இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிப்பதில் மிகவும் தெளிவான மற்றும் கடுமையான தர்க்கத்தைக் கொண்டிருக்கிறது.  முதலாவது, போரினால் பாதிக்கப்பட்டு உயிராபத்துகளுடன் வரும் 'உண்மையான அகதி அந்தஸ்து கோருபவர்கள்' மற்றும் இரண்டாவது, தங்கள் நாட்டின் பொருளாதாரச் சூழல் காரணமாக உழைப்பிற்காக வரும் 'பொருளாதாரப் புலம்பெயர்ந்தவர்கள்' ஆவர்.

முந்தைய அமைப்பில், இந்த இரண்டு தரப்பினரின் விண்ணப்பங்களும் ஒரே மாதிரியான நீண்ட பொதுவான நடைமுறையின் கீழேயே பரிசீலிக்கப்பட்டன. இதனால் உண்மையாகவே பாதுகாப்புத் தேவைப்படும் அகதிகள் பல ஆண்டுகள் முகாம்களில் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஆனால், 2026 ஒப்பந்தமானது எல்லையிலேயே இவ்விரு பிரிவினரையும் பிரித்தறியும் புதிய 'விரைவுப் பாதை' உத்தியை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் புகலிடம் பெறுவதற்கான தகுதி இல்லாத பொருளாதாரப் புலம்பெயர்ந்தவர்கள் எல்லையிலிருந்தே விரைவாகத் திருப்பி அனுப்பப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

புதிய ஒப்பந்தத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் கடல் அல்லது நில எல்லைகளைச் சட்டவிரோதமாகக் கடந்து வருபவர்கள் அனைவரும் உடனடியாக எல்லைக்கு அருகிலுள்ள பிரத்தியேக மையங்களில் 'முன்-நுழைவுத்திரையிடல்' நடைமுறைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த நடைமுறை அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

இக்காலப்பகுதியில் எல்லையை வந்தடையும் நபரின் உடல்நலம் பரிசோதிக்கப்படுவதுடன், அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவரா என்பது கண்டறியப்படும். தொடர்ந்து, பயோமற்றிக் தரவுகள் எனப்படும் கைரேகைகள் மற்றும் முக அங்கீகாரப் படங்கள் எடுக்கப்பட்டு புதிய 'யூரோடாக்' தரவுத்தளத்தில் உடனடியாகப் பதிவு செய்யப்படும்.

இந்தத் திரையிடலின் முடிவில், புகலிடக் கோரிக்கையாளரின் பின்னணி ஆராயப்பட்டு, சர்வதேச அளவில் புகலிட அனுமதி வழங்கப்படும் வீதம் 20சதவீதத்துக்கும் குறைவாக உள்ள நாடுகளிலிருந்து வரும் நபர்கள், 'எல்லையோரப் புகலிட நடைமுறைக்கு' அனுப்பப்படுவார்கள்.

இந்த எல்லையோரப் புகலிட நடைமுறையானது அகதி அந்தஸ்து கோருபவர்களின் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றமாகும். இந்த நடைமுறைக்குத் தெரிவு செய்யப்படுபவர்கள் முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான நிலப்பரப்பிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அவர்கள் எல்லைப் பகுதியிலேயே தங்க வைக்கப்பட்டு, அவர்களின் புகலிட விண்ணப்பம் 12வாரங்களுக்குள் விசாரித்து முடிக்கப்படும். இவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அடுத்த 12வாரங்களுக்குள் அவர்கள் தங்களின் சொந்த நாட்டிற்கோ அல்லது அவர்கள் பயணித்து வந்த பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கோ கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

2026 ஜூன் 12முதல் நடைமுறைக்கு வரும் புதிய 'யூரோடாக்' தொழில்நுட்பக் கட்டமைப்பு, அகதி அந்தஸ்து கோருபவர்களைக் கண்காணிப்பதில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதற்கு முன், இந்தத் தரவுத்தளம் வெறும் கைரேகைகளை மட்டுமே சேமித்து வந்தது. இது புகலிட விண்ணப்பங்களை ஒப்பிடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

ஆனால் புதிய யூரோடாக், ஒரு தனிநபர் சார்ந்த அமைப்பிலிருந்து 'விண்ணப்பதாரர் சார்ந்த' (யுppடiஉயவெ-டியளநன) விரிவான தகவல் களஞ்சியமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் கைரேகைகளுடன் விண்ணப்பதாரர்களின் முகப்படங்கள், கடவுச்சீட்டு விவரங்கள், இதர அடையாள ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுப் பதியப்படும்.

அதேவேளை, மனிதாபிமான, பாதுகாப்புக் கோணத்தில் இதில் வயதுக் குறைப்பும் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் 14 வயதிற்கு மேற்பட்டவர்களின் தரவுகள் மட்டுமே சேகரிக்கப்பட்ட நிலையில், புதிய விதிகளின்படி 6 வயது நிரம்பிய அனைத்துக் குழந்தைகளிடமிருந்தும் பயோமெட்ரிக் தரவுகள் சேகரிக்கப்படும்.

இது கடத்தப்படும் குழந்தைகளைக் கண்டறியவும், பிரிந்துபோன குடும்பங்களை ஒன்றிணைக்கவும் உதவுமென ஐரோப்பிய ஒன்றியம் கூறினாலும், இது சிறுவர்களின் உரிமைகளை மீறும் செயலென மனித உரிமை அமைப்புகள் சாடுகின்றன.

மேலும், ஒரு அகதி அந்தஸ்து கோருபவர் இத்தாலியில் பதிவு செய்துவிட்டு, பின்னர் பிரான்ஸ் அல்லது ஜேர்மனிக்குச் சென்று புதிய பெயரில் புகலிடம் கோரினால், புதிய யூரோடாக் அமைப்பு அவரை உடனடியாகக் காட்டிக்கொடுத்துவிடும் என்பதால் 'புகலிடக் கோரிக்கையை மையப்படுத்திய சட்டவிரோத செயற்பாடுகள்;' முற்றிலும் ஒழிக்கப்படும்.

அத்துடன் விண்ணப்பதாரர் உறுப்பு நாடொன்றின் பாதுகாப்பிற்கு அல்லது பொதுச்சுகாதாரத்திற்கு ஆபத்தானவர் எனக்கருதப்பட்டால், அந்தத் தகவல் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிற்கும் எச்சரிக்கையாக அனுப்பப்படும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

அகதி அந்தஸ்து கோருபவர்களைக் கையாள்வதில் எல்லையோர நாடுகளுக்கு உதவும் பொருட்டு, இந்த ஒப்பந்தம் 'கட்டாய ஒற்றுமைப் பொறிமுறையை' அறிமுகப்படுத்துகிறது. இதன்படி, ஆண்டுக்குக் குறைந்தது 30,000 அகதி அந்தஸ்து கோருபவர்கள் எல்லையோர நாடுகளிலிருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டும்.

இதில் உறுப்பு நாடுகளுக்கு மூன்று தெரிவுகள் வழங்கப்படுகின்றன. முதலாவதாக எல்லையோர நாடுகளிலிருந்து அகதி அந்தஸ்து கோருபவர்களைத் தங்கள் நாட்டிற்கு அழைத்து வந்து, அவர்களின் விண்ணப்பங்களைத் தாங்களே பரிசீலிப்பது.

இரண்டாவதாக அகதிகளைத் தங்கள் நாட்டில் குடியேற்ற விரும்பாத நாடுகள், தாங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒவ்வொரு அகதிக்கும் தலா 20,000 யூரோக்கள் வீதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நிதிக்கு வழங்க வேண்டும். இந்நிதி எல்லைப் உள்கட்டமைப்பு, அகதிகள் முகாம் பராமரிப்பிற்குப் பயன்படுத்தப்படும்.

மூன்றாவதாக பணியாளர்கள், தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் எல்லையோரப் பாதுகாப்பு உதவிகளை வழங்கலாம். இந்த முறையானது, புகலிடக்கோரிக்கையாளர்கள் ஐரோப்பா முழுவதும் பரவலாக்கப்படுவதை உறுதி செய்கிறது.

புதிய ஒப்பந்தம் குடியேற்ற நிர்வாகத்தை நெறிப்படுத்தினாலும், அது அகதி அந்தஸ்து கோருபவர்களின் அடிப்படை மனிதாபிமான உரிமைகளைப் பெருமளவில் பாதிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

இந்நிலையில் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விரிவான ஒப்பந்தம் முழுமையான வெற்றியைப் பெற வேண்டுமாயின், அது பல சவால்களைக் கடக்க வேண்டும். முதலாவதாக, 27உறுப்பு நாடுகளும் இந்த விதிகளுக்குத் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

குடியேற்றத்திற்கு எதிரான தீவிர வலதுசாரி அரசாங்கங்களைக் கொண்ட நாடுகள் இந்த 'கட்டாய ஒற்றுமை' விதியை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பது மிகப்பெரிய கேள்வியாகும்.

நிராகரிக்கப்படும் பொருளாதாரப் புலம்பெயர்ந்தவர்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு, அவர்களின் சொந்த நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் செய்துகொள்ளும் இருதரப்பு உடன்படிக்கைகள் மற்றும் நிதி சலுகைகள் தங்கு தடையின்றிச் செயற்பட வேண்டும். அந்த நாடுகள் தங்களின் குடிமக்களைத் திரும்பப் பெறுவதற்கு மறுத்தால், இந்த எல்லை விரைவு நடைமுறை தோல்வியையே சந்திக்கும்.

நன்றி வீரகேசரி