Paristamil Navigation Paristamil advert login

எதிரிகளுக்கு பதிலடி தர இந்தியா தயார்; ஆயத்த நிலையில் 12 அணு ஆயுதங்கள்

எதிரிகளுக்கு பதிலடி தர இந்தியா தயார்; ஆயத்த நிலையில் 12 அணு ஆயுதங்கள்

10 ஆனி 2026 புதன் 12:16 | பார்வைகள் : 164


நாட்டின் பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதக் கொள்கையில் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய வரலாற்று சிறப்புமிக்க  மாற்றம் அரங்கேறியுள்ளது.

அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் 12 அணு ஆயுதங்கள், உடனடியாக பயன்படுத்தக் கூடிய வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம், பாகிஸ்தான், சீனா போன்ற அண்டை நாடுகளால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அச்சுறுத்தல் போன்ற காரணங்களால், நம் நாடு அணு ஆயுதக் கொள்கையில் வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தை கொண்டு வந்து இருப்பதாக ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

வழக்கமாக அணு ஆயுதங்கள் பிரிக்கப்பட்டு, மிகுந்த பாதுகாப்புடன் தனித்தனியாக வைக்கப்பட்டு இருக்கும். ஆனால், தற்போதைய சூழலில், 12 அணு ஆயுதங்கள் ஏவுகணைகளுடன் பொருத்தப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தியா இப்படி செய்வது இதுவே முதல்முறை.

கடந்த ஆண்டில், இந்தியாவின் அணு ஆயுத கையிருப்பு சற்று அதிகரித்துள்ளது. மேலும், நீர்மூழ்கி கப்பலில் உள்ள ஏவுகணைகளில் குறைந்த எண்ணிக்கையிலான அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்டு, ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

'முதலில் தாக்கக் கூடாது' என்ற இந்தியாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. எனினும் எதிரி களின் தாக்குதலுக்கு நொடிப் பொழுதில் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆயத்தமாக இருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசோ அல்லது பாது காப்பு அமைச்சகமோ அதிகாரப்பூர்வமான விளக்கங்களை இதுவரை வெளியிடவில்லை.