பெண்களுக்கு எதிரான கொடுமைகளை ஒரு போதும் சகிக்க மாட்டேன்!: முதல்வர் விஜய்
10 ஆனி 2026 புதன் 07:07 | பார்வைகள் : 191
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை ஒருபோதும் சகிக்க மாட்டேன். பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்,'' என, சிங்கப்பெண் சிறப்பு படையை துவக்கி வைத்த முதல்வர் விஜய் உறுதி அளித்தார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும்' என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தன் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். முதல்வராக பதவியேற்ற பின், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை அமைக்க, முதல் கையெழுத்திட்டார்.
அதன்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை, முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார்.
இதற்காக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த முதல் வரை, தலைமை செயலர் சாய்குமார், டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன்பின், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., ஷானாஸ் இலியாஸ் தலைமையிலான பெண் போலீசார், அணிவகுப்பு மரியாதை அளித்தனர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசாரும், முதல்வருக்கு அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
இதையடுத்து, சிங்கப் பெண் படைக்கான சிங்கம் மற்றும் பெண் ஒருவர் படத்துடன் கூடிய,இலச்சினையை முதல்வர் வெளியிட்டார். அதிரடிப்படை ஐ.ஜி., பவானீஸ்வரி பெற்றுக் கொண்டார். இப்படையினருக்கான பிரத்யேக ரோந்து வாகனத்தையும், முதல்வர் விஜய் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து, ரோந்து வாகனத்தை முதல்வர் விஜய் ஓட்டினார்.
இதையடுத்து, முதல்வர் விஜய் பேசியதாவது:
ஒரு சில நிகழ்ச்சி மட்டுமே, மனதிற்கு நெருக்கமாக இருக்கும். அதை நினைத்தாலே, ரொம்பவும் சந்தோஷமாக இருக்கும். அப்படிப்பட்ட நிகழ்ச்சி தான் இது.
நம் பாட்டி, அக்கா, தங்கைகள், ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகள் எல்லாருக்குமான பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று சொன்னோம்; அது தேர்தலுக்கானது மட்டும் இல்லை. மனதில் இருந்து உண்மையாக, உணர்வு பூர்வமாக சொன்னது தான்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை, எப்போதும் சகிக்க மாட்டேன். அதில் ரொம்பவே உறுதியாக இருக்கிறன். சொன்னதை எல்லாமே செய்ய வேண்டும். அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக, படிப்படியாக செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
அதனால் தான், ஆட்சிக்கு வந்த கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே, இதை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறோம். தமிழகத்தில் இருக்கும் பெண்கள், பெண் குழந்தைகள் எல்லாரும் பாதுகாப்பாக தன்னம்பிக்கையாக இருக்க வேண்டும். அதற்கான முதல் கட்டம் தான் இது.
இது மனதிற்கு மன நிறைவை கொடுத்தாலும், பெண்களை பற்றி சில செய்திகளை கேட்கும் போது, உண்மையாவே மனது பதறுகிறது; கண்கள் கலங்குகின்றன. அதை கட்டுப்படுத்தவே முடியவில்லை. நடக்கும் கொடுமைகள் எல்லாம், நம் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தானே; பின்னே, மனது பதறாமல் எப்படி இருக்கும்?
பெண்களுக்கு எதிராக ஏன் இப்படி நடக்கிறது என, மற்றவர்கள் மாதிரி, 'ரீல்ஸில்' தேட முடியாது. 'ரியாலிட்டி'யை புரிந்து கொள்ள வேண்டும். இந்த பிரச்னைகள் எல்லாம் ஏன் நடக்கின்றன என, ஆய்வு செய்தது பார்த்ததில், சுற்றி சுற்றி ஒரே இடத்தில் தான் வந்து நிற்கிறது. அதுதான் போதைப் பொருள் நடமாட்டம்.
இந்த பிரச்னை, 2026 மே, 10ம் தேதியில் புதிதாக முளைத்து வரவில்லை. இது, பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை. பல ஆண்டுகளாக இதை கண்டுகொள்ளாமல் விட்டதால் தான், அந்த வேர் ஆழமாக பரவி இருக்கிறது.
இதை கண்டு கொள்ளாமல் விட்டது யார் என, நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அது உங்களுக்கே நன்றாக தெரியும். இப்போது அதுபற்றி பேசியும் பயனில்லை. போதைப்பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கி எரிய வேண்டும். அப்போது தான் பெண்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்த முடியும். அதை செய்தாலே சட்டம் ஒழுங்கு சரியாகி விடும். போதை, பெண்களுக்கு எதிரான கொடுமை, சட்டம் ஒழுங்கு, இந்த மூன்றும் ஒன்றுக்கு ஒன்று இணைந்தது தான்.
அதை எப்படி சரிசெய்ய போகிறோம் என்பது தான் முக்கியம். இது, சட்டம் - ஒழுங்கு மட்டுமல்ல; சமூக ஒழுங்கு, தனி மனித ஒழுங்கு பற்றியது. சமூகம் பொறுப்பாக இருந்தாலே, படிக்க போகுமிடம், வேலைக்கு செல்லுமிடம், பயணத்தின் போது என, பல பிரச்னைகளை கட்டுப்படுத்தலாம். பயம் இல்லாமல் நம் பெண்கள் வாழ வேண்டும் என்பது தான், நமது முதல் இலக்கு. இதை மென்மையாக சொல்கிறேன்.
கடும் தண்டனை
ஆனால், பெண்களை தொந்தரவு செய்து விட்டு, 'எஸ்கேப்' ஆகி விடலாம் என நினைப்பவர்களுக்கு, எச்சரிக்கையாக சொல்கிறேன். பெண்கள் பாதுகாப்பை தொந்தரவு செய்பவர்களை சகித்து கொள்ள முடியாது. அவர்களுக்கு கடும் தண்டனை இருக்கும். குற்றப்பத்திரிகை மிக வேகமாக தாக்கல் செய்யப்படும்.
அதேநேரத்தில், அந்த வேகத்தில் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதையும், காவல் அதிகாரிகள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தவறு செய்தவர்களுக்கு மட்டுமே, நீதிமன்றம் மூலமாக கடுமையான தண்டனை வாங்கி தர வேண்டும். அப்போது தான், தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பயம் வரும். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
முதல்வர் விஜய் மேலும் பேசியதாவது: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்காக முதல் கட்டமாக, 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. இரண்டாம் கட்டமாக படைக்கு, 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். பெண்கள் பாதுகாப்பை பலப்படுத்த, நவீன வசதியுள்ள வாகனங்கள், உபகரணங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் வழங்கப்படும்.
குற்றங்கள் நடப்பதற்கு முன்பே அதை தடுக்கும் விதமாக, இந்த படை செயல்படும். இந்த படை, களப்பணியில் ஈடுபடுவதால், அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும், குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை வாங்கி கொடுக்க முடியும் .
பெண்களை பின்தொடருவது, பாலியல் தொல்லை தருவது, திரும்ப திரும்ப தொல்லை தருவது, கடத்தல் முயற்சி, பொது இடங்களில் அசிங்கமாக நடந்து கொள்வது, பஸ், கூட்டங்களில் தொல்லை தருவது போன்ற செயல்களை, இந்த படை தடுக்கும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, இந்தியாவிலேயே முதல்முறையாக, 'டிரோன்' வாயிலான கண்காணிப்பு அறிமுகம் செய்யப்படும். ஒரு அரசின் பார்வை தொலைநோக்கோடு நேர்மையாக இருந்தாலே, அது போகிற பாதை சரியாக இருக்கும்.
மிக குறுகிய நேரத்தில், இந்த படையை உருவாக்கிய, காவல் துறை அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் பாராட்டுகள். என்னை பொறுத்தவரை, ஒரு அரசின் வெற்றி என்பது, உள்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சியில் மட்டும் இல்லை. மாநிலத்தில் உள்ள பெண்களும் குழந்தைகளும் மரியாதையாக வாழ்கின்றனரா என்பதில் தான் இருக்கிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan