Paristamil Navigation Paristamil advert login

டாஸ்மாக்கிற்கு பதிலாக கள் விற்பனையை அனுமதிக்கிலாமே! ஐகோர்ட் கிளை கேள்வி

டாஸ்மாக்கிற்கு பதிலாக கள் விற்பனையை அனுமதிக்கிலாமே! ஐகோர்ட் கிளை கேள்வி

9 ஆனி 2026 செவ்வாய் 12:10 | பார்வைகள் : 422


டாஸ்மாக்கிற்கு பதிலாக கள் விற்பனையை அனுமதிப்பதன் மூலம் வருவாய் ஈட்டலாமே? என ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருதம்புத்துார் பெருமாள்சேட், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

எங்களுக்கு சொந்தமாக பனை மரங்கள் உள்ளன. அவற்றிலிருந்து பதநீர் சேகரித்து, பனை வெல்லம் தயாரிக்கிறோம். ஏப்., 7ல் பகல், 12:45 மணிக்கு வாரன்ட் அல்லது சம்மன் இன்றி, சீருடை அணியாத மூன்று போலீசார், ஆலங்குளம் எஸ்.ஐ., இசக்கிராஜா தலைமையில் எங்கள் வீட்டிற்கு வந்தனர்.

இசக்கிராஜா துப்பாக்கியை ஏந்தியவாறு, என் மகன் மணிகண்டனை மிரட்டினார். அவரை எங்களின் பனைமர தோப்பிற்கு அழைத்துச் சென்றார். கள் அல்லது பதநீர் உள்ளதா என்பதை சோதிப்பதற்காக பனைமரத்தின் மீது ஏறுமாறு, என் மகனிடம் இசக்கிராஜா கூறினார். அப்போது, அவரை இசக்கிராஜா ஆபாசமாக திட்டினார். நானும், பேத்தியும் ஆட்சேபம் தெரிவித்தோம். பேரன், பேத்திகளை  மிரட்டிய இசக்கிராஜா தாக்க முயன்றார்.

மரத்திலிருந்து கீழே இறங்கிய மணிகண்டன் தடுத்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இசக்கிராஜா துப்பாக்கிச்சூடு நடத்தினார். மணிகண்டன் காலில் சுட்டதில் காயம் ஏற்பட்டது. இவ்வழக்கை ஆலங்குளம் போலீசார் நியாயமாக விசாரிக்க வாய்ப்பில்லை. வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். எங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தென்காசி சப் -கலெக்டர் விசாரணை அறிக்கை சமர்ப்பித்தார்.

விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: சம்பவ இடத்திற்கு மூன்று போலீசார் சென்றுள்ளனர். நிலைமையை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கள் விற்பனைக்கு  அனுமதி உள்ளது. கள் மருத்துவ குணம் கொண்டது.

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. டாஸ்மாக்கிற்கு பதிலாக கள் விற்பனையை அனுமதிப்பதன் மூலம் வருவாய் ஈட்டலாமே. இது குறித்த நிலைப்பாட்டை அரசு தரப்பில் ஜூன் 10ல் தெரிவிக்க வேண்டும். அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.