இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி; இபிஎஸ்
8 ஆனி 2026 திங்கள் 06:01 | பார்வைகள் : 483
தமிழகத்தில், காலியாக உள்ள ஐந்து தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மும்முரமாக உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில், 47 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. தேர்தலில், பெரும்பான்மை இல்லாமல், ஆட்சியமைத்த தமிழக வெற்றிக்கழகம், அ.தி.மு.க.,வை உடைத்து, 25 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெற்றது. பின்பு, அந்த 25 பேர் அணியை உடைக்கும் விதமாக, பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளின் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, தன் பக்கம் இழுத்தது.
அவர்கள், நால்வரும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்தனர். இதனால், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த, திருச்சி கிழக்கு தொகுதியோடு சேர்த்து, ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு, விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க, அ.தி.மு.க., தயாராகி வருகிறது.
இது குறித்து, அ.தி.மு.க., அமைப்பு செயலர்கள் சிலர் கூறியதாவது:
தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம்பெறவில்லை. வெளியில் இருந்து, ஆட்சிக்கு ஆதரவளிக்கும் அவர்கள், எந்நேரம் வேண்டுமென்றாலும், ஆதரவை வாபஸ் பெற வாய்ப்பு உள்ளது.
எனவே தான், ஆட்சிக்கு, பெரும்பான்மையை தக்க வைக்க, அ.தி.மு.க.,வில் இருந்து எம்.எல்.ஏ.,க்களை துாக்கி, அவர்களை ராஜினாமா செய்ய வைத்து, இடைத்தேர்தலுக்கு வழி வகுத்துள்ளனர்.
த.வெ.க.,விடம் எம்.எல்.ஏ.,க்களை பறி கொடுத்த அ.தி.மு.க., அதற்கு பதிலடி கொடுக்க, இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கொங்கு மண்டலத்தில் உள்ள தாராபுரம், பெருந்துறை தொகுதிகளுக்கு, முதற்கட்டமாக வேட்பாளர் தேர்வில், பழனிசாமி இறங்கி உள்ளார்.
இந்த தொகுதிகளுக்குள், நன்கு அறிமுகமான, வளமான, ஆறு பேரை பழனிசாமி தேர்வு செய்துள்ளார். அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதிக்கு, தகுதியான வேட்பாளரை தேடி வருகிறார். மதுராந்தகம் தொகுதியை, கடந்த தேர்தலின்போது, பா.ம.க., கேட்டது.
ஆனால், அ.தி.மு.க.,வின் மரகதம் குமரவேலுக்காக, அந்த தொகுதியை பழனிசாமி கொடுக்கவில்லை. இடைத்தேர்தலில், அந்த தொகுதியை பா.ம.க.,வுக்கும், அம்பாசமுத்திரம் தொகுதியை பா.ஜ.க.,வுக்கும் விட்டுக் கொடுக்க வாய்ப்புள்ளது. வேட்பாளர் தேர்வு முடிந்ததும், உடனே அவர்களை களத்தில் இறக்கி, தேர்தல் பணிகளை தொடங்க, பழனிசாமி முடிவு செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan