Paristamil Navigation Paristamil advert login

இலங்கை அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து கடும் கோபத்தில் ரணில்

இலங்கை அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து கடும் கோபத்தில்  ரணில்

7 ஆனி 2026 ஞாயிறு 14:58 | பார்வைகள் : 241


தற்போதைய அரசாங்கத்தின் தன்னிச்சையான அரசியல், ஆன்மீகம் மற்றும் நிர்வாக நகர்வுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கடுமையான விமர்சனங்களையும் சட்ட ரீதியான விவாதங்களையும் முன்வைத்துள்ளார். 

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் புதன்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து அவர் தனது கவலைகளையும் அரசியல் அவதானிப்புகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

நாட்டின் தற்போதைய கலாசாரச் சூழல் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க, கடந்த காலங்களில் கொழும்பு வீதிகளில் காணப்பட்ட பாரம்பரிய மதப் பொலிவு தற்போது முற்றாக மங்கிப் போயுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை சிங்களப் புத்தாண்டு மற்றும் வெசாக் பண்டிகைகள் எவ்விதத் துடிப்பான தன்மையுமின்றி வெறிச்சோடிப் போயிருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், அடுத்து வரவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொசொன் பண்டிகைக்கும் எவ்வாறான அவல நிலைமை ஏற்படுமோ என்ற பலத்த சந்தேகம் தனக்கு நிலவுவதாகக் கூறினார்.

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பௌத்த ஒழுக்காற்று நீதிமன்ற விவகாரம் குறித்து மிக நீண்டதொரு சட்டப் பகுப்பாய்வை ரணில் விக்கிரமசிங்க இங்கு முன்வைத்தார்.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கூட இலங்கையின் பாரம்பரிய பௌத்த மதம் பற்றிய தெளிவான புரிதலுடனேயே மதச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய ஆட்சியாளர்கள் பௌத்த விழுமியங்களைப் பற்றிய அடிப்படை அறிவேதுமின்றி இவ்வாறான நகர்வுகளில் ஈடுபடுவதாக விசனம் தெரிவித்தார்.

தர்மத்தின் மீது எவ்விதப் பிரச்சினையும் இல்லாத ஒரு சூழலில், பௌத்த ஒழுக்காற்று நீதிமன்றத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றால் அது அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கப்படுவது நிச்சயம் என்றார்.

ஆன்மீக மற்றும் மத நடவடிக்கைகளைத் தங்களது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே அரசாங்கத்தின் மறைமுக நோக்கம் எனச் சாடிய அவர், தர்மத்தை அதிகார வர்க்கத்தால் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

நாட்டின் உள்ளுராட்சி நிர்வாக வீழ்ச்சி மற்றும் கொழும்பு நகரின் குப்பை ஒழிப்புப் பணிகள் முடங்கியுள்ளமை குறித்தும் ரணில் விக்கிரமசிங்க தனது கடுமையான அவதானிப்பை முன்வைத்தார்.

நிர்வாகத் துறையில் வெறும் புதியவர்களை மட்டும் கொண்டு அரச இயந்திரத்தை நடத்த முடியாது என்றும், அனுபவமும் முதிர்ச்சியும் உள்ள தகுதியான நபர்களைக் கொண்டே இந்த நிர்வாகக் கட்டமைப்பை முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.

இறுதியாக நாட்டின் பொருளாதாரக் கையாளுமை குறித்துப் பேசிய ரணில் விக்கிரமசிங்க, தான் ஆட்சியில் இருந்த காலத்தில் திறைசேரி மற்றும் மத்திய வங்கியுடன் இணைந்து நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

எனினும், அன்று அந்தப் பணிகளை மிகத் திறமையாகக் கையாண்ட தகுதியான நிபுணர்கள் மற்றும் அனுபவமிக்க அதிகாரிகள் அனைவரும் தற்போதைய நிர்வாகத்தினால் திட்டமிட்ட முறையில் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.