Paristamil Navigation Paristamil advert login

செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு

செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு

6 ஆனி 2026 சனி 12:36 | பார்வைகள் : 223


தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு ஆவணங்கள் மற்றும் கணினி 'ஹார்ட் டிஸ்க்'குகள், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், 2021 - 2023ம் ஆண்டில், 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில், 397 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக, செந்தில் பாலாஜி மற்றும் அரசு அதிகாரிகள் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, மின்மாற்றி கொள்முதல் டெண்டர் தொடர்பான ஆவணங்கள், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் திருடப்பட்டு உள்ளன. டெண்டர் தொடர்பான ஆவணங்கள் குறித்த கணினி 'ஹார்ட் டிஸ்க்'குகளும் திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில், கணினி ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்த, ராணிப்பேட்டயைச் சேர்ந்த கோபிநாத் என்பவரை, கைது செய்தனர். அவரிடம் இருந்து, 34 'ஹார்ட் டிஸ்க்'குகளை பறிமுதல் செய்துள்ளனர்.

அவரிடம் பறிமுதல் செய்த ஆவணங்கள் மற்றும் 'ஹார்ட் டிஸ்க்'குகள் சி.பி.ஐ., அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மின்மாற்றி கொள்முதல் ஊழல் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சில ஆவணங்கள் இருந்தன. அவற்றையும் போலீசார்  ஒப்படைத்துள்ளனர். இதனால், செந்தில் பாலாஜி மற்றும் அரசு அதிகாரிகள் மீதான சி.பி.ஐ., விசாரணை சூடுபிடிக்கத் துவங்கி உள்ளது.