Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் தீவிரம்: ஆயிரக்கணக்கானோர் தகுதி இழப்பு!!

குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் தீவிரம்: ஆயிரக்கணக்கானோர் தகுதி இழப்பு!!

5 ஆனி 2026 வெள்ளி 07:30 | பார்வைகள் : 1026


குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சிறுவர் பராமரிப்பு துறைகளில் பணியாற்றுவோருக்கான குற்றப் பின்னணி சரிபார்ப்பு முறைமையின் மூலம் ஆயிரக்கணக்கான ஆபத்தான நபர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் விவகார உயர் ஆணையர் Sarah El Haïry தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த “நன்னடத்தைச் சான்றிதழ்” திட்டத்தின் கீழ் இதுவரை 9 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் அதிகமான சான்றிதழ்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

அதில் 5,277 பேருக்கு சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சான்றிதழ், ஒருவருக்கு குற்றப் பதிவோ அல்லது பாலியல் மற்றும் வன்முறை குற்றவாளிகள் பட்டியலில் பெயரோ இல்லையென உறுதிப்படுத்தும் ஆவணமாகும். தற்போது குழந்தைகள் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள், குடும்ப பராமரிப்பாளர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மைய ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் பணியில் சேரும் போது இந்தச் சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வீட்டில் குழந்தைகளை கவனிக்கும் குழந்தை பராமரிப்பாளர்கள், தனியார் பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் வீட்டுப்பாட உதவியாளர்கள் போன்றோருக்கும் இந்த நடைமுறையை விரிவுபடுத்த வேண்டும் என குழந்தைகள் விவகார உயர் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

குழந்தைகள் பாதுகாப்புச் சட்ட திருத்தத்தின் கீழ் இதனை இணைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும், சமீபத்தில் பாடசாலை மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறை சர்ச்சைகளின் பின்னணியில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.