Paristamil Navigation Paristamil advert login

சிவசேனாவை போல திரிணமுல் காங்., கட்சியும் உடைகிறது?

சிவசேனாவை போல திரிணமுல் காங்., கட்சியும் உடைகிறது?

3 ஆனி 2026 புதன் 14:28 | பார்வைகள் : 181


மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது போல, தற்போது மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணமுல் காங்., கட்சிக்குள் கிளர்ச்சி வெடித்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிடாபிரடா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக்க, 50 எம்.எல்.ஏ.,க்கள் ஒன்றுகூடி ரகசிய ஆலோசனை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்க சட்டசபைக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., 208 இடங்களை கைப்பற்றி, முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. இதன் மூலம் திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜியின், 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.

இந்த தோல்வியில் இருந்து திரிணமுல் காங்., மீள்வதற்குள், கட்சிக்குள் தற்போது கிளர்ச்சி வெடிக்க ஆரம்பித்து உள்ளது.

தேர்தல் முடிந்தவுடன், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் மம்தா பானர்ஜி இல்லத்தில் சமீபத்தில் நடந்தது.

அப்போது, சோபன்தேவ் சட்டோபாத்யாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதம் பெறப்பட்டு, சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால், அந்த கடிதத்தில், பல எம்.எல்.ஏ.,க்களின் கையெழுத்துகள் போலியாக போடப்பட்டுள்ளதாக சபாநாயகர் ரதீந்திரா போஸிடம் திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் ரிடாபிரடா பானர்ஜி, சந்தீபன் சாஹா புகார் தெரிவித்தனர். இதனால், போலி கையெழுத்து விவகாரம் சி.ஐ.டி., விசாரணை வரை சென்றது.

திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ.,க்களிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது, பகரூல் இஸ்லாம் உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கடிதத்தில் இருப்பது தங்களது கையெழுத்து அல்ல என்பதை சி.ஐ.டி., அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டனர்.

இதனால், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, அடுத்த சில மணி நேரங்களிலேயே எம்.எல்.ஏ.,க்கள் ரிடாபிரடா பானர்ஜி மற்றும் சந்தீபன் சாஹாவை திரிணமுல் காங்., மேலிடம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியது. இதனால், கடும் அதிருப்தியும், ஆவேசமும் அடைந்த ரிடாபிரடா பானர்ஜி, தற்போது மம்தாவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

மம்தா அறிவித்த எதிர்க்கட்சித் தலைவருக்கு மாற்றாக, ரிடாபிரடா பானர்ஜியை அப்பதவியில் அமர வைப்பதற்கு 50 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

திரிணமுல் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூத்த தலைவர் ரிஜு தத்தா இதை உறுதி செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், திரிணமுல் கட்சிக்கு தற்போது, 80 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்களில், 50க்கும் மேற்பட்டோர் கேட்வே ஹோட்டலில் ரகசியமாக சந்தித்து கூட்டம் நடத்தியுள்ளனர். உண்மையான திரிணமுல் கட்சி அவர்கள் தான் என கூறுகின்றனர். அதற்கான பட்டியலையும் சபாநாயகரை சந்தித்து வழங்க தயாராகி வருகின்றனர், என, பெரிய குண்டை வீசியுள்ளார்.

மேலும் அவர், லோக்சபாவில் உள்ள , 12 திரிணமுல் காங்., எம்.பி.,க்களும், ராஜ்யசபாவில் உள்ள ஆறு எம்.பி.,க்களும் பா.ஜ.,வுக்கு தாவ தயாராகிவிட்டனர்.

தங்களை பா.ஜ.,வில் இணைத்துக் கொள்ளும்படி அவர்கள் தினசரி கெஞ்சி கேட்கின்றனர். இந்த உண்மையை நான் வெளிப்படையாகவே தெரிவிக்கிறேன், என, கூறியுள்ளார்.

தனக்கு பெரும்பான்மையான எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருப்பதாக சபாநாயகரிடம் ரிடாபிரடா பானர்ஜி நிரூபித்து விட்டால், மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது போலவே, மேற்கு வங்கத்திலும் திரிணமுல் காங்., கட்சி இரண்டாக உடையும்.

இதனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி மம்தா கைகாட்டும் எம்.எல்.ஏ.,வுக்கு கிடைக்குமா அல்லது ரிடாபிரடா பானர்ஜிக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கதவுகள் மூடப்பட்டுவிட்டன!

திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியமாவது குறித்து மேற்கு வங்க பா.ஜ., மாநில தலைவர் சமிக் பட்டாச்சார்யா நேற்று கூறியதாவது: திரிணமுல் கட்சிக்கான கதவுகள் பா.ஜ.,வில் மூடப்பட்டு விட்டன. யாருடைய உதவியும் இல்லாமல், 208 இடங்களில் நாங்கள் வென்று இருக்கிறோம். அடிமட்டத்தில் இருந்து உழைத்ததால் இந்த வெற்றி எங்களுக்கு சாத்தியமானது. அப்படி இருக்கும்போது, எங்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களை, எப்படி நாங்கள் சேர்த்துக் கொள்வோம். பா.ஜ.,வில் திரிணமுல் கட்சிமயம் நிச்சயம் நிகழாது. இவ்வாறு அவர் கூறினார்.