Paristamil Navigation Paristamil advert login

ஈரான் சென்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரான் சென்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்

3 ஆனி 2026 புதன் 07:55 | பார்வைகள் : 450


ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, ஈரான் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்றை தாக்கி முடக்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

போட்ஸ்வானா நாட்டின் கொடியுடன் பயணித்த எம்/டி லெக்ஸி என்ற அந்த கப்பலின் பணியாளர்கள், தொடர்ச்சியான எச்சரிக்கைகளை புறக்கணித்ததை அடுத்து, அமெரிக்க விமானம் ஒன்று அதன் எஞ்சின் அறை மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் தாக்கப்பட்ட தருணத்தைக் காட்டும் காணொளி ஒன்றையும் அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ளது.

எனினும், ஈரான் இந்த விவகாரம் குறித்து பகிரங்கமாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து கப்பல்களுக்குமான தனது முற்றுகையை அமெரிக்கா இராணுவம் ஏப்ரல் 13ஆம் திகதி முதல் அமுல்படுத்தத் தொடங்கியது.

அமெரிக்க மத்திய கட்டளை பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச கடல் பகுதியில் கார்க் தீவு நோக்கிப் பயணித்த போட்ஸ்வானா கொடியுடனான எம்/டி லெக்ஸி கப்பலுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் முற்றுகை நடவடிக்கைகளை மேற்கொண்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த கப்பலின் பணியாளர்கள் 24 மணித்தியாலத்தில் காலப்பகுதியில் பலமுறை அமெரிக்கப் படைகளின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறினர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த முற்றுகை அமுலுக்கு வந்ததில் இருந்து, ஒட்டுமொத்தமாக ஆறு வணிகக் கப்பல்கள் முடக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 122 கப்பல்கள் வேறு திசைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை பணியகம் குறிப்பிட்டுள்ளது.