Paristamil Navigation Paristamil advert login

2027ம் ஆண்டு மார்ச்சில் உள்ளாட்சி தேர்தல்; வார்டு மறுவரையறை பணி மும்முரம்

2027ம் ஆண்டு மார்ச்சில் உள்ளாட்சி தேர்தல்; வார்டு மறுவரையறை பணி மும்முரம்

3 ஆனி 2026 புதன் 11:52 | பார்வைகள் : 307


தமிழகத்தில், 2027ல் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதையொட்டி, வார்டு மறுவரையறை பணிகளை விரைந்து முடிக்க, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷனர் மற்றும் எல்லை மறுவரையறை ஆணைய தலைவர் ஜோதி நிர்மலா சாமி தலைமையில், எல்லை மறுவரையறை ஆணைய கூட்டம், தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடந்தது.

இதில், 11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்கள், 177 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்கள் எண்ணிக்கை நிர்ணயம் செய்தல், அதன் தொடர்புடைய வார்டு எல்லை மறுவரையறை செய்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

வார்டு எல்லை மறுவரையறை நிர்ணய பணிகளை விரைந்து முடிக்க, ஆணைய தலைவர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்கள், 177 கிராம ஊராட்சி ஒன்றியங்களில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்கள் எண்ணிக்கை நிர்ணயம் செய்து, அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளனர்.

தமிழகத்தில் ஏற்கனவே, கிராம உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் பதவிக் காலம் முடிவடைந்த பின், சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு, 2027 பிப்., மாதம் வரை பதவிக் காலம் இருக்கிறது. அதற்கு வார்டு மறுவரை பணிகளை முடித்து, 2027 மார்ச் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.