திமுக கூட்டணி சிதறி விட்டது; காரணங்களை கண்டறியாமல் எங்களை விமர்சிப்பதா? திருமா
3 ஆனி 2026 புதன் 08:40 | பார்வைகள் : 318
தேர்தலுக்கு பின், தி.மு.க., கூட்டணி சிதறி விட்ட நிலையில், அதற்கான காரணங்களை கண்டறியாமல், எங்களை குறி வைத்து விமர்சிக்கின்றனர்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தி.மு.க.,வை குறை கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: மதச்சார்பின்மை தான் நம் கோட்பாடு என்றாலும், மதம் சார்ந்த மக்களை அன்னியப்படுத்தி, நாம் அரசியல் செய்ய முடியாது. அதன் அடிப்படையில், திருப்பதி சென்று வந்தேன். சர்ச், மசூதி மற்றும் கோவில்களுக்கு செல்கிறோம். இதுபோன்ற இடங்களுக்கு அரசியல் கட்சி தலைவர் என்ற முறையில் செல்ல வேண்டியது அவசியம். அரசியல் கட்சி தலைவர்கள் யாரும், மதம் சார்ந்த நடவடிக்கைகளை புறந்தள்ளி விடக்கூடாது.
கடவுள் நம்பிக்கை என்பது வேறு; சனதானம் என்பது வேறு. பிறப்பின் அடிப்படையில் ஏற்ற, தாழ்வு பார்க்கும் மதத்தையே நாம் விமர்சிக்கிறோம். தேர்தலுக்கு முன், நம்மை குறிவைத்து விமர்சித்தனர். தி.மு.க., ஆதரவாளர் என, பல்வேறு இழிவு சொற்களால் விமர்சித்தனர்.
அரசியலில் நேர்மை, துாய்மை வேண்டும் என, தொடர்ந்து நீடித்து வந்தோம். தி.மு.க., கூட்டணியை சிதறடிக்க முயற்சி நடந்தது; பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தேன். ஒன்றரை ஆண்டுக்கு முன்பே, விஜய் கூட்டணிக்கு அழைத்தார். அப்போது சென்றிருந்தால், நிலையான ஆட்சியை தந்திருக்க முடியும். வி.சி.க.,வும் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து இருக்கும்.
ஆனால், மறுத்து விட்டேன். இப்போது, அதை தவறு என்று நினைக்க மட்டேன். நான் செய்தது, 100 சதவீதம் சரியே. தேர்தலுக்கு பின், தி.மு.க., கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை; சிதறி விட்டது. அதற்கு உண்மையான காரணங்களை கண்டறிய முயற்சிக்காமல், கடைசி நேரத்தில் நாங்கள் எடுத்த முடிவை மட்டுமே மிக கடுமையாக தி.மு.க.,வினர் விமர்சிக்கின்றனர்.
எனக்கு பதவி ஆசை இல்லை; பதவி ஆசை இருந்திருந்தால், பா.ஜ., கூட்டணியில், மத்திய அமைச்சராகி இருக்க முடியும். ஒருபுறம் துணை முதல்வர், இன்னொரு முறை முதல்வர் என்ற பேச்சுக்கள் அடிப்பட்டன. எதற்கும் நான் அசைந்து கொடுக்கவில்லை; மயங்கவில்லை. நான் ஆசைப்பட்டு, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து விட்டு, கூட்டணி நலன் கருதி விலகி விட்டேன்.
தி.மு.க., கூட்டணியில் தான் தேர்தலை சந்தித்தேன். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இது, தி.மு.க., கூட்டணியின் வெற்றி. அதன் அடிப்படையில் பார்த்தால், தி.மு.க., கூட்டணியிலேயே நீடிப்பேன் என, முடிவெடுத்து இருக்க முடியும். ஆதரவு தர வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவை கூட, என்னால் எடுத்திருக்க முடியும்.
ஆனால், அறம் சார்ந்து சிந்தித்த காரணத்தால், த.வெ.க., ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தந்தோம். நான் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெறவில்லை என்றாலும், அமைச்சரவையில் சேர முடியும். த.வெ.க., தரப்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டது. நல்ல பொறுப்பை எடுத்து இருந்திருக்க முடியும். திருச்சி கிழக்கு தொகுதியில் கூட போட்டியிட முடியும். பதவி ஆசை இருந்திருந்தால், உடனடியாக அதற்கு இசைவு தந்திருக்க முடியும்.
இப்போதும் பல பேர், திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டியா என்றெல்லாம் பேசுகின்றனர். 100 சதவீதம் சொல்கிறேன். நான் எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். ஏற்கனவே முதல்வர் விஜயிடம் தெளிவுபடுத்தி விட்டேன்.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan