Paristamil Navigation Paristamil advert login

APL உதவித்தொகையை கோடைகாலத்திலும் தொடர்ந்து பெறுவதற்கான ஒரு முக்கியமான நடைமுறை!!

APL உதவித்தொகையை  கோடைகாலத்திலும்  தொடர்ந்து பெறுவதற்கான ஒரு முக்கியமான நடைமுறை!!

2 ஆனி 2026 செவ்வாய் 17:05 | பார்வைகள் : 649


நீங்கள் APL (Aide Personnalisée au Logement) எனப்படும் வீட்டு வசதி உதவித்தொகையைப் பெற்று வருகிறீர்கள் என்றால், கோடைகாலத்திலும் அதை தொடர்ந்து பெறுவதற்காக ஒரு முக்கியமான நடைமுறையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், இந்த உதவித்தொகையை இழக்கும் அபாயம் உள்ளது.

கோடைகாலம் நெருங்கி வருகிறது. இந்த காலகட்டத்தில் APL உதவித்தொகையை தொடர்ந்து பெற விரும்பினால், சில தகவல்களை உங்கள் CAF (Caisse d'Allocations Familiales) அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

APL உதவித்தொகை, முதன்மை குடியிருப்பில் வசிக்கும்:

  • வாடகையாளர்கள்,
  • இணை வாடகையாளர்கள்,
  • துணை வாடகையாளர்கள்,
  • மற்றும் முதியோர் இல்லங்கள் (EHPAD)
  • மாணவர் விடுதிகள் 

போன்ற குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

வீட்டின் குறைந்தபட்ச பரப்பளவு:

  • 1 நபருக்கு: 8 சதுர மீட்டர்
  • 2 நபர்களுக்கு: 16 சதுர மீட்டர்
  • ஒவ்வொரு கூடுதல் நபருக்கும்: மேலும் 7 சதுர மீட்டர்

வருமான வரம்புகள்

APL பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்புகள்:

  • தனிநபர்: €15,900
  • தம்பதி: €19,200
  • தம்பதி + 1 சார்ந்த நபர்: €24,300
  • தம்பதி + 2 சார்ந்த நபர்கள்: €28,900

APL தொகை பின்வரும் அம்சங்களைப் பொறுத்தது:

  • குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை
  • கடந்த 12 மாத வருமானம்
  • நிதி மற்றும் நிலச் சொத்துக்கள்
  • வாடகைத் தொகை

சராசரியாக, ஒரு குடும்பம் மாதத்திற்கு சுமார் €225 APL உதவித்தொகை பெறுகிறது.

உதவித்தொகை நிறுத்தப்படலாம்

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான உங்கள் நிலையை CAF-க்கு தெரிவிக்க வேண்டும். இதை CAF இணையதளத்தின் "Mon Compte" பகுதியில் அல்லது "Caf - Mon Compte" மொபைல் செயலி மூலம் செய்யலாம்.

நீங்கள் தகவல் வழங்காவிட்டால், CAF நீங்கள் ஜூன் மாத இறுதிக்குள் வீட்டை காலி செய்துவிட்டீர்கள் என்று கருதும். அப்படியானால், கோடைகாலத்தில் வீட்டு வசதி உதவித்தொகை வழங்கப்படாது.

உங்கள் நிலைக்கு ஏற்ப செய்ய வேண்டியவை

1. கோடைகாலத்திலும் வீட்டை வைத்துக்கொண்டு வாடகை செலுத்தினால் ஜூலை மாத இறுதிக்குள் இதை அறிவிக்க வேண்டும். அப்போதுதான் APL தொடர்ந்து வழங்கப்படும்.

2. வீட்டை வைத்துக்கொண்டு, கோடையில் வாடகை செலுத்தவில்லை என்றால் இந்த தகவலையும் CAF-க்கு தெரிவிக்க வேண்டும். அப்பொழுது கல்வியாண்டு தொடங்கும் போது மீண்டும் APL பெற முடியும்.

3. கோடைக்காலத்தில் மட்டும் வீட்டை விட்டு வெளியேறி, பின்னர் திரும்ப வருவீர்களானால் வீட்டை வைத்திருக்கவில்லை என்று அறிவிக்க வேண்டும். ஆனால் உங்கள் முகவரியை மாற்ற வேண்டியதில்லை. மீண்டும் வீட்டிற்கு திரும்பியதும் CAF-க்கு தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு APL மீண்டும் வழங்கப்படும்.

4. புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தால் உங்கள் இடமாற்றத்தை CAF-க்கு அறிவித்து, "Mon Profil" பகுதியில் புதிய முகவரியை புதுப்பிக்க வேண்டும். புதிய வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு மட்டுமே புதிய APL விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும்.

முக்கிய விதி

APL பெறுவதற்கு, ஒரு ஆண்டில் குறைந்தது 8 மாதங்கள் அந்த வீட்டில் வசித்திருக்க வேண்டும். அதாவது, அதிகபட்சம் 4 மாதங்கள் மட்டுமே வீட்டை விட்டு விலகி இருக்கலாம்.

2024 ஆம் ஆண்டில், APL பெறும் மாணவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது. இது பிரான்சில் உள்ள மொத்த 26 லட்சம் பயனாளர்களில் சுமார் 40% ஆகும்.