Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 06 பேர் உடல்சிதறி உயிரிழப்பு

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 06 பேர் உடல்சிதறி உயிரிழப்பு

2 ஆனி 2026 செவ்வாய் 09:20 | பார்வைகள் : 198


அமெரிக்காவின் அயோவா மாநிலத்தின் மஸ்கடின் நகரில் ஏற்பட்ட குடும்பத் தகராறு ஒன்றின் பின்னணியில், நபர் ஒருவர் வெவ்வேறு இடங்களில் நடத்திய கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொடூரங்களை அரங்கேற்றிய சந்தேக நபரான துப்பாக்கிதாரியும் பின்னர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மிசிசிப்பி ஆற்றக்கரையில் அமைந்துள்ள, சுமார் 23,000 மக்கள் வாழும் அமைதியான மஸ்கடின் நகரை இந்தத் தொடர் கொலைச் சம்பவங்கள் மொத்தமாக உலுக்கியுள்ளன.

மஸ்கடின் நகரின் குடியிருப்புப் பகுதியொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கிடைத்த அவசரத் தகவலையடுத்து, திங்கட்கிழமை மதியம் வேளையில் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

பொலிஸார் அந்த வீட்டிற்குள் சென்று சோதனையிட்ட போது, அங்கு துப்பாக்கிக் குண்டுக் காயங்களுடன் நான்கு பேர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே அவர்கள் நால்வரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

முதற்கட்ட விசாரணைகளின் மூலம், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பியோடிய சந்தேக நபர் அதே நகரைச் சேர்ந்த ரையன் வில்லிஸ் மக்ஃபார்லண்ட் எனப் பொலிஸார் உடனடியாக அடையாளம் கண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கொலையாளியைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பெரியளவிலான தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர். பொலிஸார் அவரை ஒரு இடத்தில் வளைத்துப் பிடித்து, அவருடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்த போது, சந்தேக நபரான ரையன் வில்லிஸ் மக்ஃபார்லண்ட் தப்பியோட வழியின்றித் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பொலிஸார் அவருக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்க முயன்ற போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிதாரியின் தற்கொலையைத் தொடர்ந்து, பொலிஸ் புலனாய்வாளர்கள் விசாரணைகளைத் தீவிரப்படுத்திய போது, இக்கொலைகளுடன் தொடர்புடைய மேலும் சில பாதிப்புகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதன்படி, மஸ்கடின் நகரின் மற்றொரு குடியிருப்பு வீடு மற்றும் உள்ளூர் வியாபார நிறுவனம் ஆகிய இடங்களைச் சோதனையிட்ட போது, அங்கு மேலும் இரண்டு ஆண்கள் துப்பாக்கிக் குண்டுக் காயங்களுடன் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு மரணங்களும் ரையன் வில்லிஸ் நடத்திய அதே கொலை வெறித் தாக்குதலுடன் தொடர்புடையவை என்பதைப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் கொலையாளி உட்பட மொத்தம் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். முதற்கட்ட விசாரணைகளின்படி, குடும்பத்திற்குள் ஏற்பட்ட கடுமையான தகராறு காரணமாகவே இந்த வன்முறை வெடித்துள்ளதாக மஸ்கடின் நகர பொலிஸ் மா அதிபர் அந்தோனி கீஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்த ஆறு பேரும் கொலையாளியின் நெருங்கிய உறவினர்கள் என நம்பப்படுகிறது.

இன்று என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. இந்த கொடூரமான தீய செயல் எங்களது ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது, பெரும் வேதனையைத் தந்துள்ளது.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உத்தியோகபூர்வ தகவல் வழங்கும் நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையாததால், உயிரிழந்தவர்களின் விபரங்களை வெளியிடப் பொலிஸார் மறுத்துவிட்டனர். எனினும், பொதுமக்களுக்கு இனி எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.