Paristamil Navigation Paristamil advert login

இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டோம்: மியான்மர் அதிபர்

இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளை  அனுமதிக்க மாட்டோம்: மியான்மர் அதிபர்

2 ஆனி 2026 செவ்வாய் 08:38 | பார்வைகள் : 138


இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு எதிராக, மியான்மர் மண்ணில் எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதி அளிக்க மாட்டோம்' என பிரதமர் மோடியிடம், மியான்மர் அதிபர் உ மின் ஆங் லைன் வாக்குறுதி அளித்துள்ளார்.

நம் அண்டை நாடான மியான்மரில் கடந்த 2021, பிப்., 1ல் ஜனநாயக முறைப்படி தேர்வான ஆங் சான் சூச்சியின் அரசை கவிழ்த்துவிட்டு ராணுவம் ஆட்சியை பிடித்தது. சமீபத்தில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டில் பரவலாக போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரியில் பார்லிமென்ட் தேர்தல் நடத்தப்பட்டது.

ராணுவ ஆட்சியாளர்கள் ஆதரவுடன் நடந்த இந்த தேர்தலில், மியான்மரின் புதிய அதிபராக உ மின் ஆங் லைன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொறுப்பேற்ற இரு மாதங்களுக்கு பின் முதல் முறையாக நம் நாட்டிற்கு வந்துள்ளார். ஐந்து நாள் அரசு முறை பயணமாக நேற்றுடில்லி வந்த ஆங் லைனுக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து அவர் பேச்சு நடத்தினார்.

இது குறித்து நம் வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:

மியான்மரின் உள்நாட்டு அரசியல் கட்டமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பது இந்தியாவின் நோக்கமல்ல. இருப்பினும், மியான்மரில் தற்போதும் தொடர்ந்து வரும் அமைதிப் பேச்சின் ஒரு பகுதியாக, ஆங் சான் சூச்சியின் விவகாரத்தை பிரதமர் மோடி இந்தச் சந்திப்பில் எழுப்பினார்.

மியான்மரில் நீடித்த அமைதி நிலவ வேண்டும், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சு நடத்தப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலையான கொள்கை.

வர்த்தகம், பொருளாதாரம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து இரு தரப்பிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக எல்லை பாதுகாப்பு மேலாண்மை, வளர்ச்சி உதவி மற்றும் பிராந்திய நிலவரம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.

வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, எரிசக்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளன.

மியான்மரின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என நம் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், இரு நாட்டு எல்லைகளிலும் தவறான நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

மியான்மர் மண்ணில் இருந்து, இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்கும் நிச்சயம் அனுமதி தரமாட்டோம் என்ற வாக்குறுதியை மியான்மர் அதிபர் அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நேற்று நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த மியான்மர் அதிபர் ஆங் லைன், இரு தரப்பு உறவுகள் தொடர்பாக முக்கிய பேச்சு நடத்தினார். நாளை மும்பை செல்லும் அவர், வர்த்தகம் மற்றும் தொழிற்துறையினரை சந்திக்கவுள்ளார்