Paristamil Navigation Paristamil advert login

பயிர்க்கடன் முழு தள்ளுபடியை வலியுறுத்தி தமிழகம் முழுதும் விவசாயிகள் போராட்டம்

பயிர்க்கடன் முழு தள்ளுபடியை வலியுறுத்தி தமிழகம் முழுதும் விவசாயிகள் போராட்டம்

2 ஆனி 2026 செவ்வாய் 06:27 | பார்வைகள் : 170


தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் முழுதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்ட தலை நகரங்களில், விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணியாக வந்த விவசாயிகள், தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன், போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது, விவசாய சங்க தலைவர் பழனியப்பன் உள்ளிட்டோருக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் ஒருமையில் பேசியதால், விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க விவசாயிகள், மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன், முட்டி போட்டு நுாதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வேலுார் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. பட்டை நாமம் தரித்தபடியும், வாயில் கருப்பு துணியால் மூடியபடியும், தமிழக அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.

நாகை கலெக்டர் அலுவலகம் வாயிலில், மாலை அணிந்து சடலம் போல் படுத்து, விவசாயிகள் வாயில் வாய்க்கரிசி போட்டு, ஒப்பாரி வைத்தும், மேளம் அடித்தும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் நகராட்சி திடலில், விவசாயிகள், கையில் கரும்பை ஏந்தியும், பட்டை நாமம் போட்டுக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன், 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது.

வாக்குறுதிப்படி, இந்த அரசின் முதல் பட்ஜெட் அறிக்கையிலேயே, விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பை வெளியிட வேண்டும். பொய் வாக்குறுதிகளை வழங்கி, விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி, இப்போது அரைகுறையாக எந்த விவசாயிக்கும் பயனளிக்காத வகையில், பகுதி பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருப்பது, விவசாயிகளுக்கு இழைக்கப்படும் பச்சை துரோகம்.

- தங்கம் தென்னரசு, தி.மு.க., முன்னாள் அமைச்சர்