Paristamil Navigation Paristamil advert login

லெபனானுக்குள் இஸ்ரேலியப் படைகள் மேலும் ஊடுருவ நெதன்யாகு அவசர உத்தரவு!

லெபனானுக்குள் இஸ்ரேலியப் படைகள் மேலும் ஊடுருவ நெதன்யாகு அவசர உத்தரவு!

1 ஆனி 2026 திங்கள் 10:46 | பார்வைகள் : 221


லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் தரைவழி இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துமாறும், அந்நாட்டின் உள்பகுதிகளை நோக்கி முன்னேறுமாறும் இஸ்ரேலியப் படைகளுக்குப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த ஆறு வாரங்களுக்கு முன்னர் இருதரப்பிற்கும் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் இந்த அதிரடித் தாக்குதல் உத்தரவு ஞாயிற்றுக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 2 ஆம் திகதி முதல் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்தப் போர் தீவிரமடைந்தது.

இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழி ஊடுருவல்களால் லெபனானில் இதுவரை 3,370 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 24 படையினரும் 4 பிரதானிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

லெபனானில் சுமார் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இஸ்ரேலின் வடக்குப் பகுதியிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

லெபனானில் அதிகரித்து வரும் இந்த மிக மோசமான வன்முறைச் சூழல் குறித்து விவாதிப்பதற்காக, இன்று திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரான்ஸ் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை முழுமையாகக் கைப்பற்றுவதே தங்களது நோக்கம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.தெற்கு லெபனானில் உள்ள மிக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த, 900 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க போஃபோர்ட் கோட்டையையும் அதன் மலைத்தொடரையும் இஸ்ரேலியப் படைகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளன.

கடந்த 2000 ஆம் ஆண்டு மே மாதம், 18 ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின்னர் இஸ்ரேல் இக்கோட்டையிலிருந்து வெளியேறியிருந்தது. தற்போது 26 வருடங்களின் பின்னர் மீண்டும் இக்கோட்டையில் இஸ்ரேலியக் கொடியும், கோலானி பிரிகேட் இராணுவக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, லிடானி ஆறு வரை ஏற்கனவே கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த இஸ்ரேலிய இராணுவம், தற்போது அதற்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சஹாரானி ஆற்றை நோக்கிப் படை நகர்த்தலை மேற்கொண்டு வருகிறது. சஹாரானி பகுதிக்கு தெற்கே உள்ள கிராம மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, அங்கு நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இருநாடுகளின் பாதுகாப்புப் பிரதிநிதிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, போர்நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

வான் பாதுகாப்பு அமைப்புகளால் எளிதில் கண்டறிய முடியாத, மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் ஹிஸ்புல்லாவின் 'காமிகாசி' தற்கொலைத் ட்ரோன் தாக்குதல்களால் இஸ்ரேலியப் படைகள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இத்தாக்குதல்களில் பல இஸ்ரேலியப் படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இருப்பினும், "ஹிஸ்புல்லாவின் பலத்தை முழுமையாக நசுக்கும் வரை எங்களது இராணுவப் பிரசாரம் ஓயாது" என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.