Paristamil Navigation Paristamil advert login

கோவைக்கான 8 திட்டங்கள்; அமைச்சர் ஆதவ் உறுதி!

கோவைக்கான 8 திட்டங்கள்; அமைச்சர் ஆதவ் உறுதி!

1 ஆனி 2026 திங்கள் 07:10 | பார்வைகள் : 137


கோவைக்கான 8 திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளோம். முதல்வரிடம் ஆய்வறிக்கை சமர்ப்பித்து, அவற்றை விரைவில் செயல்படுத்துவோம்,'' என, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கோவை கலெக்டர் அலுவலகத்தில் துறை ரீதியாக நேற்று ஆய்வு நடத்தினார்.

அவிநாசி ரோடு மேம்பாலம் நீலாம்பூர் வரை நீட்டிப்பது, உப்பிலிபாளையம் ரவுண்டானாவை அகலப்படுத்துவது, நீலாம்பூர் - மதுக்கரை புறவழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக்குவது, மரப்பாலத்தை விஸ்தரிப்பது உள்ளிட்ட பணிகள் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கினர். அதன்பின், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நிருபர்களிடம் கூறியதாவது:

பொதுப்பணித்துறையை லாபம் தரக்கூடியதாக மாற்ற வேண்டும். அனைத்து ஒப்பந்ததாரர்களையும் அழைத்து பேச இருக்கிறோம். வேலைகளை சொன்ன காலத்துக்குள் முடிக்க வேண்டும்; தரமாக இருக்க வேண்டும்.

தேவையற்ற செலவு நெடுஞ்சாலைத்துறையில் 'பேட்ச் ஒர்க்' என்ற பெயரில் பணத்தை தேவையின்றி செலவு செய்கிறோம். ஊழல் இல்லாமல், தரமாக ஒரு வேலையை செய்யும்போது, குறைந்தபட்சம் 40 ஆண்டுகள் கட்டடம் நிலைத்து இருக்கும்.

கோவையில் 3 தளங்களில் நீதிபதிகள் தங்க குடியிருப்பு கட்டப்படுகிறது. ஒரு கிரவுண்ட் விலை 7-8 கோடி இருக்கும். அதே இடத்தில் தரைத்தளம் மற்றும் 10 மாடி, தரைத்தளம் மற்றும் 12 மாடிகள் கட்டலாம்.  அவ்விடத்தை மீண்டும் ஆய்வு செய்து, குறைந்த பட்சம் 15 தளங்களாவது இருக்க வேண்டும் என கூறியுள்ளோம். குறுகிய இடத்தில் அதிக பயன் கிடைக்கும் வகையில் திட்டங்கள் உருவாக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அடுத்த 30 ஆண்டுக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

சென்னையில் ராஜிவ்காந்தி மருத்துவமனை, கோவையில் அரசு மருத்துவமனை கட்டடங்கள் மோசமாக இருக்கின்றன. புதிய மருத்துவமனைகள் உருவாக்கி, பழைய கட்டடங்களை பழுதுபார்க்க முடியுமா அல்லது இடித்து விட்டு புதிதாக கட்ட முடியுமா என முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.

கோவையில் செயல்படுத்த வேண்டிய 8 திட்டங்களை பற்றி ஆலோசித்திருக்கிறோம். முதல்கட்டமாக, நீலாம்பூர் - மதுக்கரை புறவழிச்சாலை, ஜி.டி.நாயுடு மேம்பாலம் நீலாம்பூர் வரை நீட்டிப்பு திட்டங்களை செய்ய இருக்கிறோம். இவ்விரு திட்டங்களில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண, இன்னும் 2 நாளில் டில்லி சென்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை சந்தித்து பேச இருக்கிறோம்.

அனைத்து துறைகளை சேர்ந்தவர்களை சேர்த்து ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்படும். என்னென்ன திட்டங்கள் நிலுவையில் இருக்கின்றன என்பதை அறிந்து, 60 நாளுக்குள் தீர்வு காண்போம். கோவைக்கு முக்கியத்துவம் கொடுக்க முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார்; கூடிய விரைவில் அறிவிப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

கோவை காந்திபுரத்தில் பெரியார் அறிவுலகம் கட்டுமான பணியை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று ஆய்வு செய்தார். அதன்பின், அவர் கூறுகையில், ''பெரியார் அறிவுலகம் இன்னும் 3 மாதத்தில் முழுமையாக கட்டி முடிக்கப்படும். கட்டடத்தில் என்னென்ன குறைகள் இருக்கின்றன என்பதை இன்ஜினியர்கள் சுட்டிக் காட்டினர். அதை சரி செய்ய அறிவுறுத்தியுள்ளோம். 3 மாதத்துக்கு பின், முதல்வர் வருவாரா என்பதை அறிவிப்போம்,'' என்றார்.

கோவையில் கட்டியுள்ள மேம்பாலங்கள் அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டவை; தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டன. புதிதாக எந்த பாலமும் கட்டவில்லை. நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த வேலு எந்த திட்டம் கொண்டு வர முயற்சித்தாலும், மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த முடியாத சூழல் இருந்தது. அவர்களுக்குள் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்ததால், புதிய திட்டம் செயல்படுத்தவில்லை. த.வெ.க., ஆட்சியில் அதிகார மையம் என யாருமில்லை. திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்பு இல்லை என்பதால், செயல்படுத்துவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.

ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:

இளைஞர்கள் மத்தியில் மதுப்பழக்கம், போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனால், பெண்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் பலவகைகளில் இருக்கிறது. இதை சரி செய்ய விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாநகராட்சி மற்றும் பள்ளி கல்வித்துறைக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்களை ஒருங்கிணைத்து, விளக்கு வசதி செய்யப்படும்.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பள்ளி கல்வித்துறை, மாநகராட்சி இணைந்து எங்கெல்லாம் விளையாடலாம் என கண்டறிந்து இணைய தளத்தில் வெளியிட இருக்கிறோம். தனியார் பள்ளி, கல்லுாரி நிர்வாகங்களிடம் பேசி, மைதானத்தை பயன்படுத்த முடியாமல் இருப்பவர்கள் ஆணையத்துடன் இணைந்து செயல்படலாம். எந்தெந்த நிறுவனத்தில் எந்தெந்த விளையாட்டுகளுக்கு மைதானம் இருக்கிறது என்பதை வெளியிடுவோம். எந்த மைதானத்தில் எந்த விளையாட்டுக்கு பயிற்சி கொடுக்கலாம் என்பதை அறியலாம்.

மைதானங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இருக்கிறோம். கோவை நேரு ஸ்டேடியத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணிக்காக பல கோடிகளை செலவழித்து வருகிறோம். கட்டுமானம் வலுவிழந்து இருக்கிறது. ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு ஏற்ற வகையில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ஆய்வு செய்தோம். முதல்வரிடம் தெரிவித்து, சென்னை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, நாகபட்டினம் ஆகிய இடங்களில் உலக தரத்துக்கு ஸ்போர்ட்ஸ் அகாடமி உருவாக்கப்படும்.

தமிழகத்துக்கான புதிய விளையாட்டு கொள்கையை விரைவில் முதல்வர் அறிவிப்பார். ஒண்டிபுதுாரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் பணி தற்போது நின்றிருக்கிறது. கிரிக்கெட் அசோசியேசனுடன் இணைந்து அவ்விடத்தை ஆய்வு செய்து, எவ்வாறு பயன்பாட்டுக்கு கொண்டு வருவதென மறுவடிவமைப்பு செய்ய வேண்டியுள்ளது. அடுத்த முறை கிரிக்கெட் அசோசியேசன் மற்றும் துறை ரீதியான நிபுணர்களுடன் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.