Paristamil Navigation Paristamil advert login

பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க அடுத்தாண்டுக்குள் ஸ்மார்ட் எல்லை திட்டம் அறிமுகம்

பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க அடுத்தாண்டுக்குள் ஸ்மார்ட் எல்லை திட்டம் அறிமுகம்

31 வைகாசி 2026 ஞாயிறு 14:40 | பார்வைகள் : 146


நம் நாட்டின் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டுக்குள் 'ஸ்மார்ட் எல்லை' திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 15,107 கி.மீ., நீள எல்லையை பாதுகாக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடி ஆய்வுகளை நடத்தி வருகிறார். இதன் மூலம், அண்டை நாடுகளில் இருந்து கட்டவிழ்க்கப்படும் ஊடுருவல், போதைப் பொருள் கடத்தல், பயங்கரவாதம் போன்ற தேச விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டின் எல்லை பகுதியானது, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, நேபாளம், பூடான், மியான்மர் என ஆறு அண்டை நாடுகளுடன் 15,107 கி.மீ., நீளத்துக்கு பரந்து விரிந்துள்ளது. வங்கதேசத்துடனான எல்லைகளில், சட்டவிரோத ஊடுருவல்கள் நமக்கு பெரும் பிரச்னையாக இருந்து வருகின்றன.

அதே போல், பாகிஸ்தானுடனான எல்லை பகுதியில் பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல் நமக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

பஹல்காம் தாக்குதல், ஜம்மு - காஷ்மீரின் எல்லை வழியாக நடந்த ஊடுருவல் காரணமாகவே நிகழ்ந்தது. இந்நிலையில், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த 26ம் தேதி முதல், நாட்டின் எல்லை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

நம் நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லை மாநிலங்களை உள்ளடக்கிய இந்த பயணத்தின் போது, எல்லை பாதுகாப்பு கட்டமைப்பு, பாதுகாப்பு படையினரின் தயார் நிலை மற்றும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை அவர் நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை சார்பில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'எல்லை பிரச்னைக்கு தீர்வு காண, அடுத்த ஆண்டுக்குள் 'ஸ்மார்ட் எல்லை' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தப் போகிறது' என, தெரிவித்துள்ளார்.

நம் அண்டை நாடான சீனாவுடனான எல்லை, மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு என மூன்று பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளது. சீனாவுடன் 3,488 கி.மீ., துார எல்லையை பகிர்ந்து கொள்கிறோம். இது, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தின் வழியாக விரிவடைந்துள்ளது.

பிரிட்டிஷ் காலத்தில் 1865ல், 'ஜான்சன் எல்லை கோடு' மற்றும் 1893ல், 'மெக்டொனால்ட் எல்லை கோடு' என்ற இரு வரைபடங்கள் முன்மொழியப்பட்டன. ஜான்சன் எல்லை கோட்டையே சரியான எல்லையாக இந்தியா கருதுகிறது.

அதேசமயம், மெக்டொனால்ட் லைனை சீனா ஏற்றுக் கொள்கிறது. கடந்த 60 ஆண்டுகளாக லடாக்கில், 38,000 சதுர கி.மீ., பரப்பளவிலான இந்தியப் பகுதியை சட்டவிரோதமாக சீனா ஆக்கிரமித்துள்ளது.

இரு நாடுகளும் சுமுக உறவை ஏற்படுத்த முயன்று வரும் நிலையிலும், எல்லை கட்டுப்பாடு கோட்டின் இருபுறமும் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லை பகுதியை பகிர்ந்து கொள்வது பற்றி, இரு நாடுகளும் வழக்கமான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றன.

குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு- - காஷ்மீர் மற்றும் லடாக் வழியே பாகிஸ்தானுடனான எல்லை 3,323 கி.மீ., துாரம் நீள்கிறது. ஜம்மு - -காஷ்மீரில் 78,000 சதுர கி.மீ., இந்தியப் பகுதியை சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது.

இது தவிர, 1963-ம் ஆண்டு சீனா - -பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தப்படி, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5,180 சதுர கி.மீ., பகுதியை சீனாவுக்கு, பாகிஸ்தான் சட்டவிரோதமாக தாரைவார்த்தது.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இரு நாட்டு உறவும் மிக மோசமடைந்துள்ளது. எல்லையோர பகுதிகளில் ஆய்வு செய்த அமித் ஷா, சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக, 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையை அறிவித்துள்ளார்.

சர்வதேச எல்லையிலிருந்து 15 கி.மீ., தொலைவிற்குள் இருக்கும் அனைத்து சட்டவிரோத கட்டுமானங்களையும் இடிக்கவும், ஊடுருவல் மற்றும் பயங்கரவாத நிதியுதவிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்கள் வழியாக வங்கதேசத்துடன் 4,096 கி.மீ., நீள 'ராட்கிளிப்' எல்லையை நம் நாடு பகிர்ந்து கொள்கிறது.

இதில், மேற்கு வங்கத்தில் மட்டும் 2,200 கி.மீ., நீள எல்லை உள்ளது. இது அதிகம் ஊடுருவக்கூடிய எல்லையாக கருதப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் ஆட்சி மாறிய நிலையில், எல்லையில் முள்வேலி அமைப்பதற்கான நிலத்தை எல்லை பாதுகாப்பு படைக்கு வழங்க, பா.ஜ., முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல் அளித்துள்ளார்.

நதிகளில் ரோந்து பணிகள் மேற்கொள்வது சவாலாக இருப்பதால், மாற்று வழியாக பாம்பு மற்றும் முதலைகளை பயன்படுத்தி ஊடுருவலை தடுப்பது குறித்து, எல்லை பாதுகாப்பு படை ஆலோசித்து வருகிறது.

உத்தரகண்ட், உத்தர பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய ஐந்து மாநிலங்களை ஒட்டி 1,751 கி.மீ., நீளமுள்ள திறந்தவெளி எல்லையாக இது உள்ளது. விசா இல்லாத பயண ஒப்பந்தம் உள்ளதால், இரு நாட்டு குடிமக்களும் சுதந்திரமாக நடமாட முடிகிறது.

தற்போது பாதுகாப்பை பலப்படுத்த, எல்லையை கடப்போரின் தரவுகளை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முக அங்கீகார முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. உத்தரகண்டின் பித்தோராகரில் சோதனை ரீதியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா -- மியான்மர் எல்லை 1,643 கி.மீ., நீளம் கொண்டது. அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் வழியாக செல்கிறது. 1967ம் ஆண்டின் ஒப்பந்தப்படி எல்லை தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு பிப்ரவரியில் தன்னிச்சையாக செல்லும் சலுகை ரத்து செய்யப்பட்டது.

ரோஹிங்யா ஊடுருவல் மற்றும் கடத்தலை தடுக்க, எல்லை பகுதியில் வேலி அமைக்கும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது.

ஸ்மார்ட் எல்லை திட்டம் என்றால் என்ன? தொழில்நுட்பம் அடிப்படையில் திறன் மேலாண்மை: எல்லை பாதுகாப்பை ஒருங்கிணைந்த தொழில்நுட்ப கண்காணிப்பிற்குள் கொண்டு வருவது. ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள்: வான் வழியாக வரும் ட்ரோன் தாக்குதல்களை கண்டறிந்து ஒருங்கிணைப்புடன் முறியடிப்பது. உதாரணமாக, 'ஷூல் பல்ஸ் ட்ரோன் எதிர்ப்பு முறை'யில் செயல்படுவது. விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை முறை: ஸ்மார்ட் வேலிகள், ட்ரோன் சென்சார்கள், ரேடார்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கட்டளை கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பது. 'போல்டு - க்யூ.ஐ.டி.,' திட்டம்: இந்திய - வங்கதேச எல்லையில் உயர் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் வேலிகள் அமைத்து, அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் கண்காணிப்பது. இந்த அதிநவீன திட்டத்தை பி.எஸ்.எப்., முன்னெடுத்துள்ளது. 'டிஜிட்டல்' சரிபார்ப்பு: எல்லையோர சோதனைச்சாவடிகளில் முக அங்கீகார முறை மற்றும் பொருட்களை சோதிக்கும் 'லக்கேஜ் ஸ்கேனர்' முறை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.