மேகதாது அணைக்கு எதிர்ப்பு; தமிழக அரசு மேல்முறையீட்டு மனுத்தாக்கல்
31 வைகாசி 2026 ஞாயிறு 11:32 | பார்வைகள் : 540
கர்நாடகா அரசின் மேகதாது அணை கட்டும் முடிவுக்கு எதிராக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது எனுமிடத்தில் தடுப்பணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடகா அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த அணைக் கட்டப்பட்டால், காவிரி நீரை நம்பியிருக்கும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால், இந்தத் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
ஆனால், இதனை பொருட்படுத்தாத கர்நாடகா அரசு, மேகதாது அணைக்கு பூமி பூஜை போடுவதற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியது.
இந்த சூழலில், டில்லி சென்ற முதல்வர் விஜய், மேகதாது அணை விவகாரத்தில் உள்ள சட்ட வாய்ப்புகள் குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, மேகதாது அணை திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்ய இறுதி ஒப்புதல் அளித்தார்.
அதன்படி, நேற்று மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவு சட்டவிரோதம் என்று அறிவித்து திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அணைக்கான பூமி பூஜை உள்ளிட்ட எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க வேண்டும். மேகதாது அணை திட்டத்துக்கு சூழல் அனுமதியை தர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தடை விதிக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan