Paristamil Navigation Paristamil advert login

"மத வெறுப்பு அதிகரித்து அனைத்து மதங்களையும் பாதிக்கிறது" - உள்துறை அமைச்சர் Laurent Nuñez கவலை!!

"மத வெறுப்பு அதிகரித்து அனைத்து மதங்களையும் பாதிக்கிறது" - உள்துறை அமைச்சர் Laurent Nuñez கவலை!!

29 வைகாசி 2026 வெள்ளி 07:30 | பார்வைகள் : 1267


மத வெறுப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக உள்துறை அமைச்சர் Laurent Nuñez கடும் கவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து மதங்களையும் குறிவைத்து தாக்குதல்கள் மற்றும் வெறுப்புச் செயல்கள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டில் மொத்தமாக 2,489 மத விரோதச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக யூத விரோதச் செயல்கள் 1,320 ஆக பதிவாகி, கடந்த ஆண்டைவிட 16 சதவீதம் குறைந்திருந்தாலும், அது இன்னும் வரலாற்றிலேயே மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் 88 சதவீதம் அதிகரித்து 326 சம்பவங்களாக உயர்ந்துள்ளன. அவற்றில் உடல் தாக்குதல்கள் 151 சதவீதம் அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, கிறிஸ்தவர்களுக்கு எதிரான 843 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், தேவாலயங்கள் மற்றும் மத பாரம்பரிய இடங்கள் அதிகமாக சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மத அடிப்படையிலான இந்த வெறுப்புச் செயல்கள் மதச்சார்பற்ற சுதந்திரத்தையும் தேசிய ஒற்றுமையையும் பாதிப்பதோடு, சமூக அமைதிக்கும் அச்சுறுத்தலாக மாறிவருவதாக அமைச்சர் எச்சரித்துள்ளார். மத நல்லிணக்கத்தை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் தொடரப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.