பரந்துார் புது விமான நிலைய பணிகள் நிறுத்தம்; தொழில் பூங்கா அமைக்க அரசு ஆலோசனை
28 வைகாசி 2026 வியாழன் 13:01 | பார்வைகள் : 667
பரந்துாரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளை, தமிழக அரசு நிறுத்தியுள்ளது. ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட, 1,700 ஏக்கரில், 'சிட்காட்' தொழிற்பூங்கா அமைக்க, உயர்மட்ட அதிகாரிகள் நிலையில் ஆலோசனை நடந்து வருவதாக, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில், பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு தேவையான இடவசதியும் அங்கு இல்லை.
எனவே, சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் பொது - தனியார் கூட்டு முயற்சியில், 5,600 ஏக்கர் பரப்பரளவில் அமைக்க, தி.மு.க., தலைமையிலான கடந்த அரசு முடிவு செய்தது.
திட்டத்திற்கான நிர்வாக அனுமதி, 2023 அக்டோபர் மாதம் தமிழக அரசு வழங்கியது. விமான நிலையம் அமைக்க தேவையான நிலங்களில், 3,700 ஏக்கர் அங்குள்ள நில உரிமையாளர்கள், விவசாயிகள், கிராம மக்களிடம் இருந்து பெறப்பட உள்ளன.
இதற்கான பணிகளை, 'டிட்கோ' எனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பரந்துார் சுற்றுப்புற பகுதிகளில், 20 கிராமங்களை ஒருங்கிணைத்து விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
மேலும், அணுகு சாலைகள் அமைக்கவும் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், கிராம மக்களை காலி செய்து, அவர்களுக்கு வேறு இடம் வழங்கி, வீடு கட்டி கொடுக்கவும் ஏற்பாடுகள் நடந்தன.
இரு ஆண்டுகளாக நில எடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், 20 யூனிட்டுகளின் கீழ், தாசில்தார்கள், சர்வேயர் என, வருவாய் துறையினர், 300 பேர் நில எடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, 1,700 ஏக்கருக்கு மேலாக, நில எடுப்பு பணிகளை முடித்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ளது; முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார்.
விமான நிலைய திட்டத்தை எதிர்த்து, கடந்தாண்டு த.வெ.க., தலைவர் விஜய் ஏகனாபுரத்தில் பேசியிருந்தார். ஆட்சி மாற்றம் வந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையில், பரந்துார் விமான நிலையம் தொடர்பான ஆலோசனை ,கூட்டம் சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில், தலைமை செயலர், டிட்கோ அதிகாரிகள், விமான நிலைய திட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, நில எடுப்பு உள்ளிட்ட விமான நிலைய பணிகளை, தமிழக அரசு நிறுத்தியுள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்ட, 1,700 ஏக்கரில், 'சிப்காட்' தொழில் பூங்கா அமைக்க ஆலோசனை நடந்து வருவதாக, வருவாய் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது குறித்து, வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பரந்துார் விமான நிலைய திட்டத்தில், இதுவரை, 1,700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இது, மொத்த நிலத்தில், 30 சதவீதம் தான். இவை, நில எடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்படாமல், நில உரிமையாளர்கள் நேரடியாக பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
அரசின் கொள்கை முடிவு காரணமாக, விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டால், கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலங்களை, நில உரிமையாளர்களுக்கு திரும்ப தர வாய்ப்பில்லை. அதேபோல, நில எடுப்பு பணிக்கான கால வரம்பு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதற்கான அரசாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கையகப்படுத்தப்பட்ட நிலங்களில், சிப்காட் தொழில் பூங்கா அமைக்க வாய்ப்பு இருக்குமா என்ற கோணத்தில், அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, நில எடுப்பு செய்யப்பட்டதற்கான வரைபடங்கள் எல்லாம், அரசு மேலிடத்திற்கு சென்றுள்ளது. விமான நிலைய திட்டம் செயல்பாட்டிற்கு வருமா அல்லது தொழில்பூங்கா அமையுமா என, இன்னும் முடிவாகவில்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan