ஹோர்முஸ் நீரிணையில் 3 கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு
22 சித்திரை 2026 புதன் 13:32 | பார்வைகள் : 330
மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் மூன்று கொள்கலன் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தும் கப்பல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓமானின் வடகிழக்குப் பகுதியில் லைபீரியக் கொடி ஏந்திய கொள்கலன் கப்பல் ஒன்று துப்பாக்கிச் சூடு மற்றும் ரொக்கெட் தாக்குதலுக்கு உள்ளாகி, அதன் மேல்தளத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின் போது இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் துப்பாக்கிப் படகு ஒன்று கப்பலை அணுகியதாகக் கப்பல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், தீ விபத்தோ அல்லது சுற்றுச்சூழல் பாதிப்போ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஈரானுக்கு மேற்கே சுமார் 8 கடல் மைல் தொலைவில் பனாமா கொடி ஏந்திய மற்றொரு கொள்கலன் கப்பல் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. எனினும், அந்தக் கப்பல் சேதமடையாமல் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மூன்றாவது லைபீரியக் கொடி ஏந்திய கப்பல் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்தக் கப்பல் சேதமடையாமல் இருந்தபோதிலும், தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், அதன் பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பாதையாகக் கருதப்படுகிறது. உலகின் மசகு எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீர்வழியாகச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan