Paristamil Navigation Paristamil advert login

பாஜவை உள்ளே விட்டால் மாநில கட்சிகள் இருக்காது; முதல்வர் ஸ்டாலின்

பாஜவை உள்ளே விட்டால் மாநில கட்சிகள் இருக்காது; முதல்வர் ஸ்டாலின்

20 சித்திரை 2026 திங்கள் 10:27 | பார்வைகள் : 286


பாஜ ஒரு அழிவு சக்தி.  அதனை உள்ளே விட்டால், மாநிலமும் இருக்காது, மாநில கட்சிகளும் இருக்காது,' என்று ஒசூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது; கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த உரிமையோடு, வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டு வந்து இருக்கிறேன். ஒரு காலத்தில் சிறிய தொழில் நகரமாக அறிவிக்கப்பட்ட ஒசூர், உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் நவீன தொழில் மையமாக மாறியிருக்கிறது. இதற்காக தான் ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால், அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள். ஒசூர் வளர்ச்சிக்கு இதை விட துரோகம் செய்ய முடியுமா?

மிகப்பெரிய கேவலம்

தமிழகத்தில் இருக்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றுகிறது. இப்படிப்பட்ட தமிழகத்தின் வளர்ச்சியை பொறாமை எண்ணத்துடன் பாஜ தடுக்கப் பார்க்கிறது. இதைத் தட்டிக்கேட்க முடியாமல் இபிஎஸ் இருக்கிறார். ஓட்டு கேட்டு வந்தால், அவர்களின் முகத்திற்கு நேராக இதைக் கேளுங்க. தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்க வக்கில்லாத இபிஎஸ், நான் காரில் போகும் போது கிரிக்கெட் பார்த்தது தப்பு என்று சொல்லியிருக்கிறார்.

காரில் போகும் போது கைகுட்டையை வைத்து முகத்தை மூடிச் செல்வது தன் கேவலம். ஒரு முதல்வர் கிரிக்கெட் பார்க்கலமா? என்றும் அவர் கேட்டுள்ளார். முதல்வர் கிரிக்கெட் பார்ப்பது தப்பில்லை. முதல்வராக இருந்த போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று வெட்கமில்லாமல் சிரித்துக் கொண்டே சொன்னீங்களே, அது தான் மாபெரும் தப்பு, மிகப்பெரிய கேவலம்.

நேற்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சியில் பேசியிருக்கிறார். அது பிரதமரின் உரை என்பதை விட, பாஜவின் தலைவரைப் போலத் தான் பேசியிருக்கிறார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும், தேசியக்கொடி பின்னணியில் வார்த்தைக்கு வார்த்தை எதிர்க்கட்சிகளை திட்டி அவர் பேசியுள்ளார்.  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுவதை எல்லாம், அரசு சார்பான உரையில் பேசியுள்ளார். இது எல்லாம் அப்பட்டமான விதிமீறல். தொகுதி சீர்திருத்த விவகாரத்தில் பார்லியில் முதல்முறையாக தோல்வி அடைந்த பதற்றத்தில் அவர் இப்படி பேசியிருக்கிறார்.  தேர்தலுக்கு நடுவில் இந்தக் கருப்பு சட்டத்தை கொண்டு வந்தால், நாம் அசால்டாக விட்டு விடுவோம் என்று நினைத்தார். அது அப்படியே மாறி விட்டது. தென்மாநில மக்கள் எல்லாம் கொதித்து போய் இருக்கிறார். அவர் கூட்டணிக்கு படுதோல்வி உறுதியாகி விட்டது.

இதனால், மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்கட்சிகள் தடுப்பதாக, அபாண்டத்தை அவர் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், இதுவும் எடுபடவில்லை. தேர்தல் நேரத்தில் அவர் நம் மீது ஏவ நினைத்த அஸ்திரம், மீண்டும் அவருக்கே விணையாகி விட்டது. முதலுக்கே மோசமாகி விட்டது.  மோடி அவர்களே 'இஸ் ஏ டூ லேட்'.  என்டிஏ கூட்டணியோட சாப்டர் முடிய போகிறது. மெஜாரிட்டி இருக்கும் பார்லியிலேயே என்டிஏ கூட்டணியை நிலைகுலைய வைத்திருக்கிறோம்.  பாஜவுக்கு அட்ரஸே இல்லாத தமிழகத்தில் என்ன நிலைமை என்று நினைத்து பாருங்கள். தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து விட்டு தான் இதனை தெளிவாக சொல்கிறேன்.  திராவிட மாடல் அரசின் திட்டங்கள் அனைத்து ஊர்களிலும் சென்றடைந்துள்ளது.

அதிமுக - திராவிட மாடல் ஆட்சியை நீங்களே ஒப்பிட்டு பார்க்க வேண்டும். நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக மட்டுமல்ல, பெருமையோடு சொல்கிறேன் தமிழகத்தின் ஒட்டுமொத்த வெற்றிக்காக போராடுகிறோம். பார்லி தேர்தலில் 40க்கு 40 வெற்றியைக் கொடுத்தீர்கள். அதை வைத்து என்ன பண்ண முடியும் என்று கேட்டார்கள். அதை நிருபித்து காட்டி விட்டோமா நேற்றைக்கு? அதனால் தான் சட்டசபை தேர்தலிலும் அப்படியொரு முழு வெற்றியை, நான் சாதிக்கக் கூடிய அளவுக்கு தர வேண்டும். அதற்காகத் தான் என்னுடைய சக்தியை மீறி பிரசாரம் செய்து வருகிறேன்.

பாஜ உள்ளே வந்து விடும் என்று சொல்வது ஏதே பேச்சுக்கு சொல்வது அல்ல. திமுக கூட்டணியை தவிர்த்து வேறு யாருக்கு ஓட்டளித்தாலும், அது பாஜவுக்கு போடும் ஓட்டு தான். தப்பித் தவறி வந்தால், நான் இவ்வளவு நேரம் தொண்டை வலிக்க பட்டியலிட்ட சாதனை திட்டங்களை எல்லாம் நிறுத்தி விடுவார்கள். தமிழகம் முழுவதும் மதக்கலவரம் செய்வது தான் அவர்களின் ஒரே கொள்கை. தஞ்சையிலும், மதுரையிலும் அதனை ஆரம்பித்து விட்டார்கள். அதனை கண்கூடாக பார்த்தோம். இப்படிப்பட்டவர்களிடம் ஆட்சி போனால், என்ன நடக்கும் என்று கற்பனை பண்ணி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உத்தரபிரதேசம், பீஹார், மணிப்பூர் என கண்முன்னாடியே நிறை எடுத்துக்காட்டுகள் இருக்கிறது.


நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாஜ உள்ளே புகுந்து உருப்பட்ட ஒரு மாநிலமும் இந்தியாவில் கிடையாது. சங்கிப்படை உள்ளே நுழைந்தாலே சர்வ நாசம் தான். திமுக அரசு இருப்பதாலே தமிழகம் காப்பாற்றப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் கட்சிகளில்  கருத்து வேறுபாடுகள், கொள்கை வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், மக்களை பிரித்து அதில் குளிர்காய மாட்டார்கள். ஆனால், பாஜ ஒரு அழிவு சக்தி.  அதனை உள்ளே விட்டால், மாநிலமும் இருக்காது, மாநில கட்சிகளும் இருக்காது. என்டிஏ என்பது தமிழகத்தை மதத்தால் துண்டாடும். ஹிந்தியை திணிக்கும். தொகுதி சீர்திருத்தத்தால் தமிழக மக்களை அதிகாரமற்ற அகதிகளாக மாற்றுவார்கள். ஜம்மு காஷ்மீர், புதுச்சேரியைப் போல யூனியன் பிரதேசம்  ஆக்கி அராஜகம் செய்யும்.  இதனால், தான் தமிழகம் Vs என்டிஏ என்று சொல்கிறேன், இவ்வாறு அவர் பேசினார்.