Paristamil Navigation Paristamil advert login

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்! ; மோடி உரை

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாததற்கு  மன்னிப்பு கேட்கிறேன்! ; மோடி உரை

19 சித்திரை 2026 ஞாயிறு 11:59 | பார்வைகள் : 236


மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனதற்கு, நாட்டின் பெண்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கும் என மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால், அக்கட்சி எதிர்த்ததை பார்த்து வேதனை அடைந்தேன்,'' என, நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். லோக்சபா, மாநில சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 131வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை, லோக்சபாவில் மத்திய அரசு அறிமுகம் செய்தது.

தோல்வி

விவாதம் நடந்த பின் நேற்று முன்தினம் ஓட்டெடுப்பு நடந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுடன் தொகுதி மறுவரையறை மசோதாவையும் இணைத்ததால், அதற்கு ஆதரவு தர முடியாது என எதிர்க்கட்சிகள் கூறின.

மசோதாவுக்கு ஆதரவாக 298 ஓட்டுகளும், எதிராக 230 ஓட்டுகளும் விழுந்தன. மூன்றில் இரு பங்கு ஆதரவு கிடைக்காததால், 54 ஓட்டுகள் வித்தியாசத்தில் மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா தோல்வி அடைந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று ஆற்றிய உரை:

மகளிருக்கான முன்னேற்றம் எப்படி முடக்கப்பட்டது என்பதை ஒவ்வொரு இந்தியரும் கண்கூடாக பார்த்தனர்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறை வேற்ற வேண்டும் என பல முறை முயற்சி எடுத்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை. இதற்காக நாட்டின் தாய்மார்கள், சகோதரிகளிடம் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

காங்., - தி.மு.க., - திரிணமுல் காங்., உள்ளிட்ட கட்சிகளால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டு உள்ளது. இதை, எதிர்க்கட்சிகள் கொண்டாடியது மிகவும் அவமானகரமானது; கண்டிக்கத்தக்கது.

மகளிர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற கனவை எதிர்க்கட்சிகள் தகர்த்துவிட்டன. 21ம் நுாற்றாண்டில் நடக்கும் அனைத்து விவகாரங்களையும் பெண்கள் கவனித்தபடி தான் இருக்கின்றனர்.

இதற்கான விளைவுகளை காங்., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்காலத்தில் நிச்சயம் சந்திக்கும். தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பெண்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். எதிர்க்கட்சிகள் பெண்களின் கவுரவத்தை காயப்படுத்தி விட்டன.

இது, ஒவ்வொரு பெண்களின் மனதிலும் நிரந்தரமாக இருக்கும். எதிர்க்கட்சிகளின் சுயநல அரசியலால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வியை தழுவி இருக்கிறது.

கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு காங்., பிராயசித்தம் தேடிக் கொள்ளும் என நம்பினேன். ஆனால், வரலாற்றில் இடம்பெற வேண்டிய அந்த பொன்னான வாய்ப்பை காங்., வீணடித்து விட்டது.

மசோதாவுக்கு காங்., ஆதரவு அளிக்கும் என மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால், அக்கட்சி எதிர்த்ததை பார்த்து வேதனை அடைந்தேன்.

ஏற்கனவே, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காங்., தன் செல்வாக்கை இழந்துவிட்டது. சொந்த பலத்தில் நிற்க முடியாத காங்., பிராந்திய கட்சி களின் தோளில் ஏறி ஒட்டுண்ணி அரசியல் நடத்தி வருகிறது.

பெண்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுக்கத் தவறியதன் மூலம், அக்கட்சி தன் வீழ்ச்சியை தானே தேடிக் கொண்டது.

அக்கறை இல்லை

தொகுதி மறுவரையறை மசோதாவால் எந்தவொரு மாநிலத்திற்கும் நிச்சயம் இழப்பு ஏற்படாது. தொகுதி மறுவரையறை என்றால், அனைத்து மாநிலத்திற்கும் சமமான அளவிலேயே உயர்வு கிடைக்கும்.

ஆனால், இந்த மசோதாவை காரணம் காட்டி, எதிர்க்கட்சிகள் வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை நிறைவேற்ற விடாமல் தோல்வி அடைய வைத்துவிட்டன.

தமிழக பெண்களை தி.மு.க., வஞ்சித்து விட்டது. அதே போல, மேற்கு வங்க பெண்களை திரிணமுல் காங்., வஞ்சித்து உள்ளது.

பெண்கள் முன்னேற்றத்தை காங்., கொஞ்சம் கூட விரும்பவில்லை. பெண்கள் உரிமைகளை காங்., கொள்ளையடித்து விட்டது.

காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கின்றன. சுயநல அரசியல் தான் அவர்களுக்கு முக்கியம்; நாட்டு நலன் மீது அக்கறை இல்லை.

மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்., கட்சியின் முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டது. லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும், ஒட்டுமொத்த பெண்களின் ஆசியை பெற்று விட்டோம்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்று வதற்கான போராட்டம் தொடர்ந்து நீடிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எழுத்துரு விளம்பரங்கள்