தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு உத்தரவாதம் தருகிறேன்! லோக்சபாவில் மோடி பேச்சு
17 சித்திரை 2026 வெள்ளி 05:14 | பார்வைகள் : 251
மறுவரையறை மசோதா தொடர்பாக நான் உத்தரவாதம் தருகிறேன். வட மாநிலமோ, தெற்கோ, கிழக்கோ, எந்த மாநிலத்திற்கும் அநீதி ஏற்படாது. முந்தைய விகிதாச்சாரம் அப்படியே தொடரும். எனவே, யாரும் அச்சப்பட வேண்டாம், என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். பார்லி.,யின் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டை, 2029 முதல் அமலாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை 543ல் இருந்து 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசியல் சாசன சட்டத்தின் 131வது திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்றும் வகையில் பார்லி., சிறப்பு கூட்டத் தொடர் நேற்று துவங்கியது .
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவற்றை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மெஹ்வால் தாக்கல் செய்தார். யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.
இந்த திருத்த மசோதாக்களை அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. குறிப்பாக காங்., மூத்த தலைவர் வேணுகோபால், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தில் திருத்தங்களை செய்யவும், தொகுதி மறுவரையறை ஆணையத்தை அமைக்கவும் கொண்டுவரப்பட்டுள்ள மசோதாக்கள் அரசியலமைப்புக்கு எதிரானவை, என வேணு கோபால் குற்றஞ் சாட்டினார்.
பெண்கள் இடஒதுக்கீடு விஷயத்தில், மத்திய அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது? முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்குங்கள், இந்த மசோதாவை ஆதரிக்கிறோம்,'' என அகிலேஷ் யாதவ் பேசினார்.
தொகுதி மறுவரையறைக்கு 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொள்வதற்கு தி.மு.க., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் இந்த முடிவைக் கண்டித்து, தி.மு.க., - எம்.பி.,க்கள் கருப்புச் சட்டை அணிந்து சபைக்கு வந்தனர்.
அப்போது பேசிய தி.மு.க., - எம்.பி., பாலு, ''மூன்று மசோதாக்களும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து இருப்பதால், 'சாண்ட்விச் மசோதா' என அழைக்கலாம். மசோதாக்களை ஏன் தனித்தனியாக பிரித்து தாக்கல் செய்யவில்லை? மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் புதிய திருத்த மசோதாவை கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லை, என்றார்.
ஏறத்தாழ 40 நிமிடங்கள் வரை அனல் பறக்கும் விவாதம் நடந்ததால், மசோதாவை அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், ஓட்டெடுப்பு நடந்தது. 251 எம்.பி.,க்கள் ஆதரவாகவும், 185 எம்.பி.,க்கள் எதிராகவும் குரல் ஓட்டு பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து பெரும்பான்மை பலம் கிடைத்ததால், மசோதாக்கள் அறிமுகம் செய்யப் பட்டன.
இதையடுத்து, மசோதாக்கள் மீதான விவாதத்தை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் தொடங்கி வைத்து பேசியதாவது:
கடந்த 2023ல் கொண்டு வரப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் நடைமுறை சிக்கல் உள்ளது.
அந்தச் சட்டத்தின்படி, இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டுமெனில் தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம். 2026-க்குப் பிறகு தான் புதிய கணக்கெடுப்புத் தரவுகள் கிடைக்கும் என்பதால், 2029 பொதுத்தேர்தலுக்குள் ஒதுக்கீட்டை செயல்படுத்த முடியாது.
எனவே, இந்த நடைமுறை சிக்கலை நீக்கி, தேர்தலுக்கு முன்பே ஒதுக்கீட்டை உறுதி செய்யவே இந்த புதிய அரசியலமைப்பு சட்டத்தின் 131வது திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
மகளிருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான காலம் கனிந்து விட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை முன்னெடுத்த பிரதமர் மோடியின் தலைமைத்துவம் பாராட்டுக்குரியது. எந்த மாநிலத்திற்கும் இந்த மசோதாக்களால் பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு அவர் பேசினார்.
காங்., மூத்த எம்.பி., கவுரவ் கோகாய் கூறுகையில், ''லோக்சபா இடங்களின் எண்ணிக்கையை, 850-ஆக உயர்த்த யார் முடிவெடுத்தது? 850-ஆக உயர்த்த வேண்டும் என்ற, அந்த '850' என்ற எண், எங்கிருந்து வந்தது? நாக்பூரிலிருந்து வந்ததா? மக்கள் தொகைக் கணக்கெடுப்போ அல்லது அது தொடர்பான முறையான பார்லிமென்ட் ஆவணங்களோ ஏதுமில்லாமல், அந்த எண் எப்படி வந்திருக்க முடியும்?
பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதத்தை, 2023-லேயே கொண்டு வந்துவிட்டதாக அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். அப்படியிருக்கையில், இன்று இந்த மசோதா, முற்றிலும் ஒரு புதிய சிந்தனையாகவும், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகவும் சித்தரிக்கப்பட்டு, ஏன் அறிமுகப்படுத்தப்படுகிறது,'' என கேள்வி எழுப்பினார்.
பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா பேசுகையில், ''தென் மாநிலங்களில் இந்த மசோதாக்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. தொகுதி மறுவரையறை என்பது மறைமுகமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அல்ல. அரசியல் சாசனம் எதை வலியுறுத்துகிறதோ, அது முழுதாக பின்பற்றப்படும்,'' என்றார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:
மகளிர் இட ஒதுக்கீடு என்பது பெண்களுக்கு வழங்கும் பிச்சை அல்ல, அது அவர்களின் பிறப்புரிமை. இந்த விவகாரத்தை அரசியல் தராசில் வைத்து அளக்க வேண்டாம்
பல ஆண்டுகளாக தள்ளிப்போடப்பட்ட இந்த நீதியை வழங்குவதற்கான தருணம் இது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதன் மூலம், நாம் ஒரு பாவத்திலிருந்து விடுபடுகிறோம்.
மசோதாவிற்கு எதிராக அரசியல் செய்வதைத் தவிர்த்து, அதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். 'உத்தரவாதம்' என்ற வார்த்தை வேண்டும் என்றால் அதையும் பயன்படுத்துகிறேன். 'வாக்குறுதி' என்ற வார்த்தை வேண்டும் என்றாலும் பயன்படுத்துகிறேன். ஒருவேளை தமிழில் இதற்கென சிறப்பான வார்த்தை இருந்தால், அதையும் சொல்லத் தயார். நோக்கம் தூய்மையாக இருந்தால், வார்த்தை விளையாட்டுகள் தேவையில்லை.
தொகுதி மறுவரையறை மசோதா தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, சிறிய மாநிலம் அல்லது பெரிய மாநிலம் என எதற்கும் பாகுபாடு காட்டப்படாது. எந்த மாநிலத்திற்கும் அநீதி இழைக்கப்படாது. தொகுதி மறுவரையறைக்குப் பிறகும், மாநிலங்களின் இட விகிதாச்சாரம் மாறாது. தற்போதைய நிலையில் எந்த விகிதத்தில் இடங்கள் உள்ளனவோ, அதே விகிதத்தில்தான் அதிகரிப்பும் இருக்கும்.
இந்த மசோதா எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் அரசியல் லாபத்தைத் தரப்போவதில்லை. இதை எதிர்க்கும் கட்சிகள் நீண்ட காலத்திற்கு அரசியல் ரீதியாக விலை கொடுக்க வேண்டியிருக்கும். பெண்கள் இதை மன்னிக்க மாட்டார்கள். நீங்கள் இதை ஆதரித்தால், பெருமை அனைத்தையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். எனவே, இம்மசோதா ஒருமனதாக நிறைவேற ஆதரவு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan