Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., அரசை தண்டிக்க தமிழக மக்கள் தயார்!: பா.ஜ., நிர்வாகிகளிடம் மோடி உறுதி

தி.மு.க., அரசை தண்டிக்க தமிழக மக்கள் தயார்!: பா.ஜ., நிர்வாகிகளிடம் மோடி உறுதி

14 சித்திரை 2026 செவ்வாய் 12:45 | பார்வைகள் : 223


தமிழகத்தை ஆளும் தி.மு.க., அரசின் நிர்வாக அமைப்பில், ஊழல் ஒரு அங்கமாகவே மாறி விட்டது. அதனால், தி.மு.க.,வையும், அதன் அரசையும் தண்டிக்க, தமிழக மக்கள் தயாராக உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியை, மாற்றத்திற்கான நம்பிக்கையாகவும் பார்க்கின்றனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும், 23ம் தேதி நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பா.ஜ., தொண்டர்களை உற்சாகப்படுத்த, பிரதமர் மோடி, 'எனது பூத் - மிக வலிமையான பூத்' நிகழ்ச்சி வாயிலாக, தமிழக பா.ஜ., பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் நேற்று மாலை, 'ஆன்லைன்'  வாயிலாக கலந்துரையாடினார்.

தமிழகத்துக்கு தாராளம்

இந்நிகழ்ச்சியை, சென்னை மயிலாப்பூர் உட்பட மாநிலம் முழுதும் ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜ.,வினர் நேரடியாக ஒளிபரப்பு செய்தனர். மயிலாப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:

அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பல ஆண்டுகளாகவே இரவு பகல் பாராமல், மக்களுடன் இணைந்து, தேசிய ஜனநாயக கூட்டணிக்கான பிரசார இயக்கத்தில் இணைந்திருக்கிறீர்கள்.

ஒவ்வொரு நிர்வாகியும், 'என் பூத் மிக வலிமையான பூத்' என்ற மந்திரத்தை தாங்கி செயல்பட்டு வருகிறீர்கள். பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை, தமிழக மக்கள் மாற்றத்திற்கான ஒரு நம்பிக்கையாக பார்க்கின்றனர்.

கடந்த, 2004 - 2014 வரையிலான காலக்கட்டத்தில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், தி.மு.க., அங்கம் வகித்தபோது கூட, தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் வரவில்லை. எத்தனையோ பிரச்னைகள் இருந்தபோதிலும், அப்போது அவற்றுக்கு தீர்வுகள் காணப்படவில்லை.

ஆனால், பா.ஜ., தலைமையிலான மத்திய அரசின், 10 ஆண்டுகளில், இந்த சூழல் முற்றிலும் மாறுபட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ரயில்வே, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் உட்பட பல்வேறு முக்கிய திட்டங்களை தமிழகத்திற்கு தந்துள்ளது. இத்திட்டப் பணிகள் மிக வேகமாக நடக்கின்றன.

ஆளும் தி.மு.க., அரசின் முறையற்ற நிர்வாகத்தால், அக்கட்சியை தண்டிக்க, தமிழக மக்கள் தயாராக இருப்பதை, நான் அறிகிறேன். தமிழகத்தில் தி.மு.க., அரசு, ஊழலை, தன் நிர்வாக அமைப்பின் ஒரு அங்கமாகவே மாற்றி  விட்டது.

ஒவ்வொரு துறையிலும் முறைகேடுகள் மலிந்துள்ளன. பல அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஊழல், கமிஷன், வசூல் ஆகியவை, தி.மு.க., அரசின் அடையாளமாகவே மாறி வருகின்றன.

விவசாயிகளின் நலனே தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதன்மையான முன்னுரிமை. நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை நனவாக்கும் முயற்சியில், ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில், 11 புதிய மருத்துவ கல்லுாரிகள் துவக்கப்பட்டுள்ளன. கடந்த, 10 ஆண்டுகளில், மருத்துவ கல்வி இடங்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், தமிழகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக, பாம்பன் பாலம் கட்டுமானம், இந்த நேர்மறையான பணிகளை பிரதிபலிக்கிறது. திட்டங்களின் பயன்கள், எந்த ஒரு இடைத்தரகரும் இன்றி, நேரடியாக விவசாயிகளை சென்று அடைவதை உறுதி செய்வதே, என் அரசின் அணுகுமுறையாக இருந்து வருகிறது.   தமிழகத்தில், 'பி.எம்.கிசான் சம்மான் நிதி' திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டு உள்ளது. 'பசல் பீமா யோஜனா' திட்டத்தின் கீழும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பீட்டு தொகைகள் வழங்கப்பட்டு, அந்த பணமும் நேரடியாக விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன.

தி.மு.க., அரசின் அணுகுமுறையால், பல ஏழை குடும்பங்களால், 'பி.எம்.ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் பயன்களை பெற முடியாமல் போனது; இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தமிழகத்தில், இத்திட்டத்திற்கு முறையான கணக்கெடுப்புகள் நடத்தப்படவில்லை; தகுதியுள்ள நபர்கள் பட்டியலில் சேர்க்கப்படவும் இல்லை.

அவ்வாறு செய்திருந்தால், தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைத்திருக்கும். தமிழகத்தில் தி.மு.க., அரசு மேற்கொண்டு வருவதாக கூறப்படும் முறையற்ற நிர்வாகத்தை, பா.ஜ., தொண்டர்கள், மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.

திட்டங்களின் பயன்கள் கிடைக்கப்பெறாத, ஆனால் இன்னும் தகுதி வாய்ந்த நபர்களை கண்டறிய வேண்டும். தமிழகத்தில், ஒருமுறை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால், தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு கிடைப்பதை, நாங்கள் உறுதி செய்வோம்; இது, மோடியின் உத்தரவாதம்.

இன்று, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. போதைப்பொருட்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனைக்கான வலைப்பின்னல் வலுவடைந்து வருகிறது. இத்தகைய சட்ட விரோத செயல்களுக்கு, தி.மு.க., அரசே பாதுகாப்பு அளித்து வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத நிலையிலும் கூட, நாங்கள் எவ்வளவோ திட்டங்களை செய்துள்ளோம். இதை இளம் வாக்காளர்களிடம், பா.ஜ., தொண்டர்கள் எடுத்துரைக்க வேண்டும். தமிழகத்தில் இரட்டை இன்ஜின் அரசு அமைந்தால், வளர்ச்சியின் வேகம் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பா.ஜ., தொண்டர்களிடம், இந்நிகழ்ச்சி வாயிலாக, பிரதமர் மோடி கலந்துரையாடினார். 

எழுத்துரு விளம்பரங்கள்