தேர்தலில் விரல் ரேகை கருவிழி முறை அமலாகுமா? ஆணையம் பதில் தர உத்தரவு
14 சித்திரை 2026 செவ்வாய் 11:19 | பார்வைகள் : 212
தேர்தலில் கள்ள ஓட்டுகளை தடுக்க ஓட்டுச்சாவடிகளில் விரல் ரேகை மற்றும் கருவிழி பயோமெட்ரிக் அடையாள முறையை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த மனு:
தேர்தல்களில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. குறிப்பாக, ஆள்மாறாட்டம், இரட்டை ஓட்டுப்பதிவு அரங்கேறுகின்றன.
தற்போது, வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் கைமுறை சரிபார்ப்பு முறையே நடைமுறையில் உள்ளது. இதில் பழைய புகைப்படங்கள், எழுத்துப் பிழைகள் மற்றும் நிகழ்நேர சரிபார்ப்பு வசதி இல்லாததால், தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
இதை தடுக்க வெறும் கை விரல்களில் மை வைப்பது மட்டும் போதாது. மாறாக, ஓட்டு போடும் போது கை ரேகை மற்றும் கருவிழி பயோமெட்ரிக் போன்ற முறைகளை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் ஆள்மாறாட்டம், இரட்டை ஓட்டுப்பதிவு, போலி ஓட்டுகளை ஒழிக்க முடியும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று விசாரித்த, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்சி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
தற்போது சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடப்பதால், இந்த கோரிக்கையை பரிசீலிக்க முடியாது. எனினும், அடுத்த லோக்சபா தேர்தல் அல்லது மாநில சட்டசபை தேர்தல்களுக்கு முன், இந்த முறையை பின்பற்றுவது அவசியமா என்பது குறித்து ஆராய வேண்டும்.
இது தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தேர்தல் கமிஷன் மற்றும் பல மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan