Paristamil Navigation Paristamil advert login

ஊழல்வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையில் நடக்கும் தேர்தல் இது: அண்ணாமலை

ஊழல்வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையில் நடக்கும் தேர்தல் இது: அண்ணாமலை

14 சித்திரை 2026 செவ்வாய் 05:14 | பார்வைகள் : 210


டில்லிக்கும் தமிழகத்திற்கும் தான் தேர்தல் என முதல்வர் அடிக்கடி கூறி வருகிறார். அப்படி அல்ல, கோபாலபுரத்தின் ஊழல்வாதிகளுக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் நடக்கும் தேர்தல் இது,
என பா.ஜ., தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரை விமான நிலையம் வந்த அவர் கூறியதாவது:

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு  தி.மு.க., அரசு தவறான திட்ட அறிக்கையை அனுப்பியது. அதில், மதுரையில் ரோட்டில் தனியாக ஒரு பாதையைப் பிரித்து பஸ் போவதற்கான பாதை அமைக்க தான் கேட்டிருக்கிறார்கள். மதுரைக்கு மெட்ரோ வேண்டும் என மாநில அரசு கேட்கவில்லை என மத்திய அரசு தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் மெட்ரோ குறித்து பொய்யாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். உண்மையிலேயே மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கேட்டிருந்தால், தி.மு.க., அரசு மத்திய அரசுக்கு  அனுப்பிய கடிதத்தை வெளியிட வேண்டும். மத்திய அரசின் கடிதத்திற்கு தமிழக அரசு இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை.

தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான புதிய திட்ட அறிக்கை மக்கள் தொகையை குறிப்பிட்டு மெட்ரோ ரயில் திட்டத்தை பெற்றுத் தருவோம்.

தி.மு.க., அரசு எதில் நம்பர் ஒன் என்று அவர்கள் சொல்ல வேண்டும். தமிழகத்தை அதல பாதாளத்திற்கு தள்ளியதுதான் தி.மு.க.,  அரசின் நம்பர் ஒன் சாதனை.

நெல்லுக்கு ஊக்கத் தொகையை நிறுத்துங்கள் என கடிதம் எழுதவில்லை என மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலினோ, மத்திய நிதி அமைச்சர் எழுதிய கடிதத்தை வெளியிடுவோம் என கூறுகிறார். முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தை வெளியிடுவாரா. தேர்தல் நேரத்தில் இல்லாத கடிதத்தை பற்றி முதல்வர் பேசுகிறார்.

தமிழகத்தில் தேர்தல் களம் இரண்டுமுனை போட்டியாக மாறிவிட்டது. தி.மு.க., தொண்டர்கள் கடுமையாக வேலை பார்க்கின்றனர். ஆனால் தி.மு.க., ஆட்சிக்கான எதிர்ப்பு அலை மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் எவ்வளவோ பிரசனைகள் நடக்கிறது. அதைப் பற்றி கவலைப்படாமல் ஐ.பி.எல்., பார்ப்பதுதான் முதல்வர் ஸ்டாலினுக்கு வேலையா.

டில்லிக்கும் தமிழகத்திற்கும் தான் தேர்தல் என முதல்வர் அடிக்கடி கூறி வருகிறார். அப்படி அல்ல, கோபாலபுரத்தின் ஊழல்வாதிகளுக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் நடக்கும் தேர்தல் இது.

விஜய் அவருடைய கட்சிக்கு ஓட்டு கேட்கிறார். விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.  விஜயும், தொண்டர்களும்  பாதுகாப்புடன் இருக்க வேண்டும். விஜய் முழுமையாக பேச வேண்டும். அவர் பேசுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

அனைத்து இளைஞர்களும் எங்கள் பக்கம் இருக்கின்றனர். இந்த தேர்தல் இளைஞர்கள் தீர்மானிக்கக்கூடிய தேர்தல். இளைஞர்கள் ஓட்டு செலுத்தும் பொழுது சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்