Paristamil Navigation Paristamil advert login

இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி - ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி - ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

11 சித்திரை 2026 சனி 19:06 | பார்வைகள் : 361


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உரங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகளும் கணிசமாக உயரக்கூடும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எச்சரித்துள்ளது.

இதேவேளை, கடந்த காலங்களில் 5% ஆக இருந்த இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் தற்போது 4% ஆகக் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான சிரேஷ்ட பொருளாதார நிபுணர் லிலியா அலெக்சாண்டியன் கருத்துத் தெரிவிக்கையில்:

"கடந்த ஆண்டு பணவீக்கம் மறை பெறுமதியில் இருந்தது. எனினும், இந்த ஆண்டு அது 5.2% வரை அதிகரிக்கும். இது மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், அடுத்த ஆண்டு மீண்டும் 4% ஆகக் குறையும். தற்போது உரங்களின் விலை சுமார் 50% ஆல் அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் இலங்கையின் விவசாயத் துறையில் எதிரொலிக்கும். உணவுப் பொருட்களின் விலை உயர்வதற்கும் இது ஒரு பாரிய சவாலாக அமையும். உர விலை மற்றும் மின்சாரக் கட்டணம் உயரும் என்பதால், அத்தியாவசிய நிவாரணங்கள் தேவைப்படுவோருக்கு அதனை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்."

மேலும், மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 20% ஆல் குறைந்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதான பொருளாதார அதிகாரி லக்ஷினி பெர்னாண்டோ தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில்:

"மத்திய கிழக்கிலிருந்து பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வராமல் போனால், வளைகுடா பிராந்திய வான்பரப்பைப் பயன்படுத்தி இலங்கை வரும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும். இதன் தாக்கம் எதிர்வரும் மாதங்களில் உணரப்படும்," எனத் தெரிவித்தார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்