Paristamil Navigation Paristamil advert login

பேச்சுவார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை - பாகிஸ்தானில் ஈரான் சபாநாயகர்

பேச்சுவார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை - பாகிஸ்தானில் ஈரான் சபாநாயகர்

11 சித்திரை 2026 சனி 07:29 | பார்வைகள் : 246


போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பார் காலிப் உள்ளிட்ட குழுவினர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்த சபாநாயகர், “இந்த பேச்சுவார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என தெரிவித்துள்ளார்.

“அமெரிக்கர்களுடனான எங்களுடைய அமைதிப் பேச்சுவார்த்தை எப்போதும் தோல்வியிலும், வாக்குறுதி விதிமீறல்களிலும் முடிவடைகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.


அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடையே அமெரிக்கா இரண்டு முறை ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. எங்களுக்கு நல்லெண்ணம் உள்ளது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லை” என்று சபாநாயகர் காலிப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் சென்றுள்ள குழுவினரில் பாதுகாப்பு, அரசியல், இராணுவம், பொருளாதாரம், சட்டம் தொடர்பான பிரமுகர்கள் அடங்குகின்றனர்.

அதன்படி, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகருடன் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி, பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி அக்பர் அகமதியன், ஈரான் மத்திய வங்கி ஆளுநர் அப்துல் நாசர் ஹிம்மதி மற்றும் ஈரான் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் பலர் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சனிக்கிழமை (11) பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இரு தரப்பும் தயாராக இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்