Paristamil Navigation Paristamil advert login

இண்டி கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்ற முடிவு?

இண்டி கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்ற முடிவு?

1 வைகாசி 2026 வெள்ளி 09:56 | பார்வைகள் : 165


இண்டி' கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், அக்கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்ற புதிய வியூகம் அமைத்துள்ளன. இதற்காக, காங். மற்றும் பா.ஜ.வை விரும்பாத கட்சிகளை ஒன்றிணைத்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளன.

கடந்த 2014ல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ. ஆட்சி உருவானது. 2024 தேர்தலில் மோடியையும், பா.ஜ.வையும் வீழ்த்த காங்கிரஸ் புதிய கூட்டணியை அமைத்தது. சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க. கட்சிகளை சேர்த்து 'இண்டி' கூட்டணியை உருவாக்கியது.

லக்னோவில் ஆலோசனை

இருப்பினும், இந்த கூட்டணியால் பா.ஜ.வை வீழ்த்த முடியவில்லை. தேர்தல் தோல்விக்கு காங்கிரசே காரணம் என்ற குரல் இண்டி கூட்டணியில் ஒலிக்க தொடங்கியது. முதலாவதாக, கடந்தாண்டு ஆம் ஆத்மி கட்சி வெளியேறியது. திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்குள் இருந்தபடியே காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கின.

இண்டி கூட்டணிக்கு புதிய தலைமை தேவை என்ற கருத்து எழுந்தது. கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்ற பல கட்சிகள் முடிவு செய்துள்ளன. திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, உத்தவ் தாக்கரே சிவசேனா  உள்ளிட்ட கட்சிகள், கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மியை இணைத்து புதிய கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

காங்கிரசை எதிர்க்கும் கட்சிகளை மட்டுமின்றி, பா.ஜ.வை எதிர்க்கும் பிஜு ஜனதா தளம், பாரத் ராஷ்ட்ர சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங். போன்ற கட்சிகளையும் இந்த கூட்டணியில் இணைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக, உத்தர பிரதேசத்தின் லக்னோவில் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், நெருக்கடி ஏற்படுத்திய காங்கிரசுக்கு பதிலடி தர காத்திருக்கும் தி.மு.க.வையும் இந்த கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி நடக்கிறது. லக்னோ  கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதி ஐந்து மாநில தேர்தல் முடிவு வந்தபின் இக்கூட்டம் நடக்கிறது.

இண்டி கூட்டணியில் இருந்தபடியே, அதில் உள்ள முக்கிய கட்சியான காங்கிரசை வெளியேற்ற பல கட்சிகள் முடிவு செய்துள்ளது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.