பிற மாநிலங்களின் மதுபானங்களுக்கு தமிழக அரசின் அரசாணை பொருந்தாது
30 சித்திரை 2026 வியாழன் 14:22 | பார்வைகள் : 1544
தனிநபர் பயன்பாட்டிற்காக, 4.5 லிட்டர் மது பாட்டில்களை வைத்துக் கொள்ள விலக்கு அளிக்கும் தமிழக அரசின் உத்தரவு, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநில மதுபானங்களுக்கு பொருந்தாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், மீஞ்சூர் பகுதியை சேர்ந்த தமிழரசன், ராஜேஷ்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனு:
ஆந்திர மாநிலத்தில் இருந்து, 3.4 லிட்டர் மதுபானத்தை விற்பனைக்காக கொண்டு வந்ததாக, எளாவூர் சோதனைச் சாவடியில், கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவினர், எங்கள் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
தமிழக அரசாணையின் படி, 4.5 லிட்டர் வரை மதுபானத்தை, தனி நபர் பயன்பாட்டிற்காக வைத்திருக்கலாம். நாங்கள் எடுத்து வந்த மதுபானம், எங்களின் சொந்த பயன்பாட்டிற்கானது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இருவர் மீதான விசாரணைக்கு, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்குகளை, நீதிபதி என்.நிர்மல்குமார், நேற்று இறுதி விசாரணைக்கு எடுத்து கொண்டார்.
அப்போது தமிழக அரசு தரப்பில், மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, 4.5 லிட்டர் விலக்கு அரசாணை என்பது தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும். புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து, எடுத்து வரப்படும் மதுபானங்களுக்கு பொருந்தாது.
முந்தைய உத்தரவுகள், இந்த அம்சத்தை கருத்தில் கொள்ளாமல் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. அவை இவ்வழக்கிற்கு பொருந்தாது.
புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு 4.5 லிட்டர் வரை மதுபானம் எடுத்து வர, நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது என, சமூக வலைதளங்களில் தகவல் பரவி உள்ளது, என்றார்.
இதையடுத்து நீதிபதி, 4.5 லிட்டர் வரை, தனி நபர் பயன்பாட்டு விலக்கு அளிக்கும் அரசாணை என்பது, தமிழகத்தில் சட்டப்பூர்வமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும், என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan