ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு தடை கூடாது: ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்
30 சித்திரை 2026 வியாழன் 13:19 | பார்வைகள் : 1631
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கடும் கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ள இந்தியா, அதன் வழியாக கப்பல் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தக்கூடாது எனவும் கூறியுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் அறிக்கையை, ஐநாவுக்கான துணை தூதர் யோஜ்னா படேல் தாக்கல் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் எரிசக்தி மற்றும் பொருளாதார பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில், ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கவலை அளிக்கிறது.
ராணுவ நடவடிக்கைகளின் போது, வணிக கப்பல்களை குறிவைக்கக்கூடாது. அத்தகைய நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியது. இந்த மோதலில், கப்பலில் இருந்த இந்திய மாலுமிகளின் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்பட்டது இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது.வணிக கப்பல்களை குறிவைப்பதும், கப்பல் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதும் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் மற்றும் வர்த்தக சுதந்திரத்துக்கு தடையாக இருப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்த விவகாரத்தில் சர்வதேச சட்டம் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். இந்த ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் மற்றும உலகளாவிய வர்த்தக சுதந்திரத்தை விரைவில் மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan